ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் மக்களுக்கான திட்டங்களைச் சொல்ல வேண்டுமே தவிர மாறாக கடலில் நீச்சலடிப்பது, பள்ளி மாணவர்களுக்கு உடற்பயிற்சி சவால் விடுப்பது போன்ற மக்களைத் திசைத்திருப்பும் செயல்களைச் செய்வது சரியானதல்ல என திருநெல்வேலியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நேற்று (மார்ச் 2) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பேரணியில் பங்கேற்ற நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி சீமைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வந்துசென்ற சூடு குறைவதற்குள் நடிகை குஷ்பு தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திருநெல்வேலி ரத வீதிகளில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பேரணியில் பங்கேற்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசியதாவது, “தமிழக சட்டமன்றத் தேர்தலில் – அதிமுக பாஜக கூட்டணியே மாபெரும் வெற்றி பெறும். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அனைத்துத் தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மத்தியிலும், மாநிலத்திலும் ஊழலற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் பாஜக தலைமையிலான மத்திய அரசு கல்வி, சுகாதாரம், சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு ஏராளமான திட்டங்களை வகுத்துள்ளது. தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியும் எவ்வித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் மக்களுக்கு நல்லாட்சி செய்து வருகிறார். நிலைமை இப்படி இருக்க தமிழக முதல்வர் மீது திமுகவினர் ஆதாரமின்றி குற்றம் சுமத்துபவர்களாகவே உள்ளனர்.
திமுக எப்போதும் வாக்குறுதிகளை சொல்லத்தான் செய்யும். தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சி என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். தென்தமிழகத்தில் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி பொய் பிரச்சாரம் செய்துள்ளார். ஒரு கட்சி தலைவன் பிரச்சாரத்தில் மக்களுக்கான திட்டங்களைச் சொல்ல வேண்டும். மாறாக கடலில் நீச்சலடிப்பது, பள்ளி மாணவர்களுக்கு உடற்பயிற்சி சவால் விடுப்பது, நடனமாடுவது போன்ற மக்களை திசைத்திருப்பும் செயல்களை செய்வது சரியானதல்ல.
கூட்டணி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாஜக மரியாதையை விட்டுக்கொடுக்காது. கமல்ஹாசன் தலைமையிலான மூன்றாவது அணியின் தாக்கம் என்பது அந்த அணி அமைந்த பின்பே தெரியவரும். சமையல் எரிவாயு, பெட்ரோல் – டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தேவையான முயற்சிகளை பாஜக அரசு எடுத்து வருகிறது” என்று கூறியுள்ளார்.
**சக்தி பரமசிவன்**
�,