ஒரு வாரத்தில் நகைக்கடன் தள்ளுபடி அரசாணை: ஐ.பெரியசாமி

Published On:

| By Balaji

நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

சென்னையில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் இன்று துறை சார்ந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, கூட்டுறவுச் சங்கங்களில் 5 சவரனுக்குக் கீழ் கடன் தள்ளுபடி தொடர்பான அரசாணை ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்றும் நகைக்கடன் தள்ளுபடியால் 11 லட்சம் பேர் பயன் பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர் 15 கூட்டுறவுச் சங்கங்களில் 12 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறிய அவர் அடுத்த 6 மாதத்திற்குள் விவசாய கூட்டுறவுச் சங்கங்கள் கணினி மயமாக்கப்படும். படித்த இளைஞர்களுக்குக் கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறினார்.

அதுபோன்று சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கக்கூடிய கடன் வட்டியைக் குறைப்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும். சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நியாய விலை கடைகளில் விற்பனையாளர் ,உதவியாளர் என 4000 பணியிடங்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் பணியிடங்கள் நிரப்பப்படும்.

கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட நகைக் கடனில் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது தேவைப்பட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பான ஆடிட்டிங் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த பணிகள் ஒரு மாதத்தில் முடிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பெரியசாமி கூறினார்

**-பிரியா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share