சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த ஜூலை 6ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் கலந்துகொண்டார். அந்த கூட்டத்தில் கலந்துகொண்டதை அடுத்து அவர் பாஜகவில் இணைந்துவிட்டார் எனத் தகவல் வெளியானது . இந்நிலையில் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள முன்னாள் நீதிபதி பாஜகவில் இணையும் எண்ணமில்லை என்று கூறியுள்ளார்.
பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் அவர் எழுதிய கடிதத்தில், ”ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும், நான் பாஜகவில் இணைந்துவிட்டதாகச் செய்திகள் வெளியானதை அறிந்தேன். கடந்த ஜூலை 6ஆம் தேதி பாஜக சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். அந்தக் கூட்டத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கலந்துகொண்டார், அவரிடம் சட்டம் தொடர்பான சில முக்கிய பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்காக அங்குச் சென்றிருந்தேன். அவருடன் தனிப்பட்ட முறையில் எந்த ஆலோசனைகளும் நடத்தப்படவில்லை. கூட்டம் அதிகமாக இருந்ததால் மேடையில் காத்திருக்கச் சொன்னார்கள்.
அமைச்சர் வரத் தாமதமானதாலும், நிகழ்ச்சி தொடங்கியதாலும் அங்கேயே காத்திருந்தேன், கூட்டத்தில் அவர் பேசிய பிறகு என்னை அழைத்து பாஜக உறுப்பினர் அட்டையை கொடுத்து என்னைக் கட்சியில் சேரும்படி அழைத்தார்கள். அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் நான் அந்த நோக்கத்தோடு அங்கு செல்லவில்லை சட்டம் தொடர்பாக ஆலோசிக்கத்தான் சென்றேன்.
ஆனால் பாஜகவில் நான் உறுப்பினராகச் சேர்ந்து விட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. பாஜகவில் அடிப்படை உறுப்பினராகச் சேரும் எந்த விதமான எண்ணமும் எனக்கு ஒருபோதும் இல்லை. ஒரு வேளை எனது பெயர் உறுப்பினர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் அதை நீக்கவும் கூறியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
�,