குட்கா விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் கு.க.செல்வம் முறையீடு செய்துள்ளார்.
சட்டமன்றத்திற்கு குட்கா கொண்டு சென்ற விவகாரத்தை உரிமை மீறல் குழுவுக்கு சபாநாயகர் அனுப்பி வைத்த நிலையில், இதுபற்றி விளக்கம் அளிக்க ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில், 21 பேர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து சட்டப்பேரவைச் செயலாளர் தரப்பிலிருந்து மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில் கடந்த 12,13,14 ஆகிய தேதிகளில் சபாநாயகர் தரப்பு, திமுக தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டது. திமுக தரப்பில், உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர்ந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், கே.பி.பி.சாமி ஆகியோர் இறந்து விட்டதாகவும், கு.க.செல்வத்துக்கு தாங்கள் ஆஜராகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் திமுகவிலிருந்து அண்மையில் நீக்கப்பட்ட ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ இன்று (ஆகஸ்ட் 17) தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்தார். அதாவது, “உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கியது தொடர்பான வழக்கில் திமுக உறுப்பினர்களின் வாதத்தையே தன் தரப்பு வாதமாக எடுத்து கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
அப்போது, விசாரணையின் போது எங்கு சென்றீர்கள் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “வழக்கு விசாரணை ஏற்கனவே முடிந்துவிட்டது. விசாரணை நடைபெற்ற மூன்று நாட்களும் கு.க.செல்வம் தரப்பு வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை என்பதால் மனுவை தள்ளுபடி செய்துவிட்டோம்” என்று குறிப்பிட்டனர். உரிய மனு தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து, மனுதாக்கல் செய்யும் பணிகளை கு.க.செல்வம் தரப்பு தீவிரப்படுத்தியுள்ளது.
**எழில்**
�,