^முன்ஜாமீன் கேட்கும் மாஜி அமைச்சர்!

politics

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் கேட்டு முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நாடோடிகள் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சாந்தினி. இவர், அதிமுக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதில் மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஐந்து ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றி விட்டதாகவும், மூன்று முறை கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியதாகவும், தற்போது கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் புகார் தெரிவித்தார்.

இந்தப் புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது, பாலியல் வன்கொடுமை, பெண்களின் அனுமதியின்றி கருச்சிதைவு, கொலை மிரட்டல், தகவல் தொழில் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், அடித்து காயம் ஏற்படுத்துதல், உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மணிகண்டனின் உதவியாளர் பரணி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஆனால் சாந்தினியின் குற்றச்சாட்டை மறுத்த மணிகண்டன், சாந்தினி யார் என்றே தெரியாது அவர் பணம் பறிக்கும் கும்பல் பின்னணியில் இந்த புகாரைக் கொடுத்துள்ளார் என்று தெரிவித்தார்.

இதனிடையே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய நிலையில் மணிகண்டன் தலைமறைவானார்.

தொடர்ந்து சாந்தினி அளித்த புகாரில் மணிகண்டனுக்கு எதிராக ஆதாரங்களை திரட்ட தனிப்படை போலீசார் அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் சென்றனர். மணிகண்டனின் குடும்பத்தினர், உதவியாளர், அவரது வீட்டு பணியாளர்கள் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதுபோன்று நடிகை சாந்தினி கருக்கலைப்பு செய்துகொண்ட, மருத்துவமனை மருத்துவரிடமும் விசாரணை நடத்தவுள்ளனர்.

இதனிடையே மணிகண்டனின் மனைவி, ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக்கிடம் புகார் மனு ஒன்று அளித்தார்.

அதில், “அறுவை சிகிச்சை நிபுணரான எனது கணவர் மிகவும் கௌரவமான அரசியல் செல்வாக்கு கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் அமைச்சராக இருந்தபோது பலரும் அவரை வந்து சந்தித்து அருகில் நின்று புகைப்படம் எடுத்துள்ளனர்.

இப்படிப்பட்ட ஒரு படத்தை நெருக்கமாக இருப்பது போன்று சித்தரித்து, பணம் பறிக்கும் நோக்கத்தில் நடிகை சாந்தினி பொய் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் சாந்தினி கூறியுள்ள காரின் எண் தவறானது.

இதுபோன்ற பொய்யான புகாரை அளித்து எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் அவமானத்தையும் மன உளைச்சலையும் நடிகை சாந்தினி ஏற்படுத்தியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதற்கு மத்தியில் நடிகை சாந்தினி மருத்துவரிடம் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் “நான் எத்தனை முறை கருக்கலைப்பு செய்தேன் என்பது உங்களுக்குத் தெரியும்தானே. நீங்கள் தான் அதைச் செய்தீர்கள். நான் எத்தனை முறை தொடர்பு கொண்டாலும் மணிகண்டன் போனை எடுப்பதில்லை. முற்றிலுமாக என்னைத் தவிர்க்கிறார்.

நான் நேரடியாக முதல்வரிடம் ( முன்னாள் முதல்வர்) சென்று ஆதாரங்களைக் காண்பித்து ஒரு கடிதம் கொடுத்தால் என்னவாகும்… நீங்களே சொல்லுங்கள். கருக்கலைப்பால் என்னுடைய உடம்பில் எவ்வளவு தழும்புகள் ஏற்பட்டுள்ளது. எனக்கு பலமுறை கட்டாய கருக்கலைப்பு செய்த போதும் பல பிரச்சினைகள் ஏற்பட்ட போதும், அதனை வைத்து நான் எதையும் மணிகண்டனிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. அதுவும் உங்களுக்கு நன்றாக தெரியும்.

எனது நாட்டில் நானும் ஒரு முக்கிய நபர் தான். எனக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து நான் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்” என்று சாந்தினி பேசியுள்ளார்.

தற்போது சாந்தினி கொடுத்துள்ள வீடியோ, ஆடியோ ஆதாரங்களை வைத்து போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “நடிகை சாந்தினி எனக்கு எதிராகக் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை.

என்னிடம் பணம் பறிக்கும் நோக்கில் இந்த புகாரை அவர் கொடுத்துள்ளார். சமுதாயத்தில் பிரபலமானவர்களை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில் அவர் செயல்பட்டு வருகிறார். மலேசியாவில் இது போலப் பலரை மோசடி செய்துள்ளதாக அவர் மீது புகார்கள் உள்ளன. அவரை கருக்கலைப்பு செய்யும்படி நான் மிரட்ட வில்லை.

சினிமா வாய்ப்பு இல்லாததாலும் பெற்றோரின் மருத்துவச் சிகிச்சைக்காகவும் உதவி கேட்டதால் பரணி என்பவர் மூலம் 5 லட்சம் ரூபாய் கொடுத்தேன். தற்போது அதைத் திருப்பிக் கேட்டது முதல் என்னை பிளாக்மெயில் செய்ய தொடங்கினார். அவரை நான் மிரட்டவில்லை. ஆரம்பக்கட்ட விசாரணை ஏதுமின்றி எனக்கு எதிராக அவசர அவசரமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *