கே.பி.பெருமாள்
தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ளதால் விவசாயிகள் விவசாயப் பணிகளில் வேகமாக ஈடுபட்டுள்ளார்கள். விதை, உரம் உள்ளிட்ட பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைத்தால் மட்டுமே விவசாயிகள் உரிய காலத்தில் விதைத்திட முடியும். ஆனால், ஒருபுறத்தில் விதைகளின் விலை எட்ட முடியாத உயரத்தில் உள்ளது. விவசாயிகள் கடன் வாங்கி அல்லது நகைகளை அடமானம் வைத்து விதைகளை வாங்கினாலும் அடி உரமாகப் பயன்படுத்த டிஏபி, யூரியா, காம்ப்ளக்ஸ் போன்ற உரங்கள் தற்போது கிடைப்பதில்லை.உரங்கள் பெருமளவில் தட்டுப்பாடும் விலையேற்றமும் ஏற்பட்டுள்ளது.
**உரங்களைக் கைப்பற்றும் விவசாயிகள்**
தமிழகத்தில் ஏறத்தாழ 24.8 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் சாகுபடி மேற்கொள்ளப்படும் நிலை உள்ளது. இதனால் யூரியா, டிஏபி, பொட்டாஷ் உள்ளிட்ட அனைத்து வகை உரங்களின் தேவை அதிகரித்துள்ளது. தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 1,43,500 மெட்ரிக் டன் உரத்தில் இதுவரை 77,863 மெட்ரிக் டன் உரம்தான் உர உற்பத்தி நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ளது. இதனால் உரத்தட்டுப்பாடு தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமல்ல; இந்தியா முழுவதும் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒன்றிய வேளாண் துறை அமைச்சரின் தொகுதியிலேயே விவசாயிகள் உரங்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களை முற்றுகையிட்டு உரங்களை எடுத்துச் செல்வதை சமூக ஊடகங்களில் பார்க்க முடிகிறது. ஹரியானா மாநிலம் மகேந்திரா காரில் தனியார் ஒருவரின் உரக்கடையில் பதுக்கி வைத்திருந்த டிஏபி உரத்தை விவசாயிகள் எடுத்துச் செல்லும் காட்சியைப் பார்க்க முடிகிறது.
வட மாநிலங்களில் பல்வேறு உரக்கடைகளுக்கு முன்னால் விவசாயிகள் டிஏபி உரத்துக்காக வரிசையில் காத்து நிற்பதாக செய்திகள் வருகின்றன. சில மாநிலங்களில் விவசாயிகள் தங்களது கடன்களை அடைத்தால் மட்டுமே உரங்கள் வழங்கப்படும் என்று வியாபாரிகள் கட்டாயப்படுத்துவதாகத் தெரிகிறது. உரம் கிடைக்காததால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஐந்து விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பாஸ்பாரிக் அமிலம், அம்மோனியா உள்ளிட்டவற்றின் விலை சர்வதேச அளவில் அதிகரித்து வருவதால் உர விலைகள் உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஒரு மூட்டை டிஏபி உரத்தின் விலை கடந்த ஆண்டு ரூ.1,700. அதற்கு ஒன்றிய அரசு மானியம் ரூ.500 வழங்கியது. விவசாயிகளுக்கு ரூ.1,200க்கு ஒரு மூட்டை டிஏபி கிடைத்தது. தற்போது மூலப்பொருட்கள் விலை உயர்வால் உற்பத்தி விலை ரூ.2,400 ஆக உள்ளது. இதனால் உரங்களின் விலையைப் பெரிய அளவில் உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று உர உற்பத்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
**இறக்குமதியைச் சார்ந்திருப்பதால்…**
உரங்கள் உற்பத்தியில் இந்தியா அதிக அளவில் இறக்குமதியைச் சார்ந்துள்ளது. 2020இல் மொத்த விநியோகத்தில் யூரியா 25 சதவிகிதம், டிஏபி 68 சதவிகிதம், பொட்டாஷ் 100 சதவிகிதம் இறக்குமதி செய்யப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்படும் உரத்துக்குக்கூட மூலப்பொருட்களான பாஸ்போரிக் அமிலம் போன்றவை, இயற்கை எரிவாயு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. டிஏபி மொத்த உற்பத்தி மற்றும் இறக்குமதி 2021 மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் 31 சதவிகிதம் குறைவாக உள்ளது. இதே மாதங்களில் பொட்டாஷ் விநியோகம் 68 சதவிகிதம் குறைவாக உள்ளது. இந்தாண்டு (2021) அக்டோபர் 31இன்படி டிஏபி கையிருப்பு 14.63 லட்சம் டன்னாக இருந்தன. 2020ஆம் ஆண்டு இதே காலத்தில் 44.95 லட்சம் டன்கள். 2019ஆம் ஆண்டில் 64 லட்சம் டன் கையிருப்பு இருந்தது. அதே போல் பொட்டாஷ் 2020ஆம் ஆண்டில் 21.70 லட்சம் டன்னாக இருந்தது. இந்தாண்டு 7.82 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது. அதேபோல் 2019ஆம் ஆண்டில் 21.52 லட்சம் டன்கள் கையிருப்பு இருந்தது. உரம் வழங்கல் ஒவ்வொரு ஆண்டும் வீழ்ச்சி அடைந்துள்ளது. தனியார்மயமாக்கப்பட்டது மற்றும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் நரேந்திர மோடி ஆட்சியில் பெரிய அளவில் உரங்கள் பதுக்கல் மற்றும் கள்ள மார்க்கெட்டில் விற்பனை நடைபெறுகிறது. இதனால் விவசாயிகள் உரம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
**கம்பெனிகளுக்கு மானியம்**
தில்லியில் 2021-22ஆம் ஆண்டுக்கான பாஸ்பரஸ் – பொட்டாசியம் உரங்களுக்கு ஊட்டச்சத்து அடிப்படையில் மானிய விலைகளை நிர்ணயிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. நைட்ரஜன் உரம் கிலோ ஒன்றின் மானிய விலை ரூ.18.79, பாஸ்பரஸ் உரம் கிலோ ஒன்றின் மானிய விலை ரூ.45.32, பொட்டாஷ் உரம் கிலோ ஒன்றின் மானிய விலை ரூ.10.12, கந்தக உரம் ரூ.23.74. யூரியா மற்றும் 22 வகையான பாஸ்பரஸ்-பொட்டாசியம் உரங்களைத் தயாரிப்பாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் மூலம் ஒன்றிய அரசு மானிய விலையில் கிடைக்கச் செய்கிறது. பாஸ்பரஸ், பொட்டாசியம் உரங்களுக்கான மானியம் கடந்த 2010 ஏப்ரல் 1 முதல் ஊட்டச்சத்து அடிப்படையில் மானியத் திட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. இந்த மானியங்களை உரக் கம்பெனிகளுக்கு அரசு வழங்கி வருகிறது. ஜூன் மாதத்தில் கூடுதல் மானியமாக ரூ.14,775 கோடி செலவிடுகிறது. 2021-22ஆம் ஆண்டில் உர மானியத்துக்காக ஒன்றிய அரசு கிட்டத்தட்ட ரூ.79,600 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியாண்டில் மட்டும் உரமானியங்கள் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டும் என்று ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
**தற்போதைய விலை**
இந்தப் பட்டியலில் டிஏபி விலை மட்டுமே குறைந்துள்ளது. யூரியா விலையில் மாற்றமில்லை. மற்ற உரங்களின் விலை அதிகரித்துள்ளது.ஒன்றிய அரசு உரத்துக்கான மானியம் ஒதுக்கீடு செய்த பின் ஏற்பட்டுள்ள விலை மாற்றம் டிஏபி உரத்தில் மட்டுமே தெரிகிறது. மற்ற உரங்களின் விலை பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் அதிக கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள்.
**ஒன்றிய அரசின் பித்தலாட்டம்**
ஒன்றிய பிஜேபி அரசு கடந்த 2020-21 ஆம் ஆண்டில் உரத்துக்கான மானியம் 1 லட்சத்து 33 ஆயிரத்து 947 கோடி (பட்ஜெட்டில்) வழங்கப்பட்டது. இந்தாண்டு ரூ.79 ஆயிரத்து 530 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. உர மானியத்தில் ரூ.54 ஆயிரத்து 417 கோடி குறைக்கப்பட்டுள்ளது. உரத் தயாரிப்பின் மூலப் பொருளாக இருக்கும் பாஸ்பாரிக் அமிலம் விலை பன்னாட்டு சந்தையில் உயர்ந்துள்ளதால் டிஏபி, காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்களின் விலை உயர்ந்துள்ளதாக இப்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் உர மானியம் குறைக்கப்பட்டுள்ளதால் மூலப்பொருட்களை காரணம் காட்டி உரங்களின் விலையை உரக் கம்பெனிகள் உயர்த்தி வருகின்றன. ஆனால் நரேந்திர மோடி அரசாங்கம் உர விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; மானியம் உரக் கம்பெனிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே பழைய விலைக்கே உரங்கள் விற்பனை செய்யப்படும் என்று தண்டோரா போட்டு வருகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என்று கூவி வருகிறது. உண்மையில் நடந்தது என்னவென்றால் கடந்த ஆண்டைவிட உரக் கம்பெனிகளுக்கு மானியம் குறைவாகக் கிடைத்ததால், விலையை ஏற்றுகிறோம் என்ற பெயரில் ஒன்றிய அரசிடமிருந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கபளீகரம் செய்துள்ளதை காண முடிகிறது. அவ்வாறு நடந்த பின்பும் கூட டிஏபி உரத்தை தவிர மற்ற உரங்களின் விலை குறைக்கப்படவில்லை.
எனவே, விவசாயிகளுக்குக் குறைந்த விலையில் உரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்திட ஒன்றிய அரசு கீழ்க்கண்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
NBS (Nutrient Based Subsidy) திட்டத்தின் கீழ் உரங்களுக்கான விலைக் கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டு வரவும். இதனை மேம்படுத்துவதற்காக திட்டம் உருவாக்கிட உயர்மட்டக் குழு அமைத்திட வேண்டும்.
பொதுத்துறை மூலம் போதுமான அளவு உரங்களை உடனடியாக இறக்குமதி செய்ய வேண்டும். நிறுவனங்கள் போதுமான அளவில் உரங்கள் விவசாயிகளுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
**உர உற்பத்திக்கான தேசியத் திறனை வலுப்படுத்த வேண்டும். **
மக்களின் வரிப்பணம் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மானியம், தள்ளுபடி என்று பல்வேறு வடிவங்களில் சென்று கொண்டே இருக்கிறது. ஆனால் உழைக்கும் விவசாயிகளோ, ஏழை எளிய மக்களோ அடுத்த வேளை சோற்றுக்கு அல்லல்பட வேண்டியுள்ளது. நரேந்திர மோடி அரசு யாருக்காகச் செயல்படுகிறது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். உர விலை உயர்வு மூலம் விவசாயிகள் வயிற்றில் மட்டும் அடிக்கவில்லை பிஜேபி அரசு, அனைத்துப் பகுதி மக்களின் வயிற்றிலும் அடிக்கிறது.
**நன்றி: தீக்கதிர்**
**கட்டுரையாளர்: கே.பி.பெருமாள், மாநிலப் பொருளாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்**
.
�,”