ஜெயம் ஜெயம்: மாசெக்கள் கூட்டத்தில் துரைமுருகன் உள்குத்து பேச்சா?

Published On:

| By Balaji

ஜூன் 14 ஆம் தேதி நடந்த திமுக மாசெக்கள் கூட்டத்தில் திமுக பொருளாளராக கலந்துகொண்டார் துரைமுருகன். ஏற்கனவே பொதுச் செயலாளர் பதவியில் போட்டியிடுவதற்காக தனது பொருளாளர் பதவியை ராஜினாமா செய்திருந்தார் துரைமுருகன். ஆனால், கடந்த ஜூன் 3 ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில்,

“கொடிய நோயான கரோனா அச்சுறுத்தும் நேரத்தில், திமுக சட்ட விதி: 17-ஐ பயன்படுத்தி, பொதுக்குழுவை கூட்டி, பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்வு செய்ய முடியாத அசாதாரண சூழ்நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அப்பொதுக்குழு கூடும் வரையில், திமுக சட்ட விதி: 18-ன் கீழ் எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின்படி, துரைமுருகன் கொடுத்த ராஜினாமா கடிதத்தின் பெயரில் நான் எடுத்த நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து அவரே பொருளாளர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என அறிவிக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இனி திமுகவில் தனக்கு பொதுச் செயலாளர் வாய்ப்பு இல்லையென்ற வருத்தத்தில் துரைமுருன் இருக்கிறார். இந்த பின்னணியில் ஜூன் 14 ஆம் தேதி மாசெக்கள் கூட்டத்தில் துரைமுருகன் பேசிய பேச்சு கட்சிக்குள் விவாதப் பொருளாகியுள்ளது.

துரைமுருகன் கூட்டத்தில் பேசும்போது, “கொரோனா காலத்திலும் ஐந்தே நிமிடங்களில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டிவிட்டார் தளபதி. அந்த சக்தி தளபதிக்குதான் இருக்கிறது” என்று சொல்ல, அப்போது குறுக்கிட்ட ஸ்டாலின், “அப்ப கொரோனா இருக்கட்டும்னு சொல்றீங்களா? “ என்று கேட்டார். அதற்கு சிரித்த துரைமுருகன், “அப்படி சொல்லவில்லை. கொரோனா காலத்திலும் உங்கள் பணி எப்படி இருக்கிறது என்றால்… போர்க்களத்தில் தலை ஒருபக்கம் கிடக்கும், எலும்புகள் முறிக்கப்பட்ட உடல்கள் ஒருபக்கம் கிடக்கும். ஆனால் தலைமை தாங்கும் போர் படைத் தளபதி, முந்துங்கள் முந்துங்கள் ஜெயம் ஜெயம் நமக்கே வெற்றி என்று சொல்லி படைகளை அழைத்துச் செல்லுவான். அது மாதிரி கொரோனா காலத்திலும் தளபதி திமுக என்ற படையை முன்னோக்கி நகர்த்திக் கொண்டு செல்கிறார்” என்று பேசினார்.

மாசெக்கள் கூட்டம் முடிந்ததும் துரைமுருகனின் இந்த பாயின்ட்டைப் பற்றிதான் சில மாசெக்கள் குறிப்பிட்டுப் பேசிக் கொண்டார்கள்.

“துரைமுருகனின் பேச்சு தலைவரை போற்றுவதற்கா, அல்லது ஜாடை மாடையாக தாக்குவதா என்று தெரியவில்லையே? கொரோனா ஊரடங்கு பாதிப்பு நேரத்தில் ஸ்டாலின் வெளியே செல்வதைப் பார்த்துதான் மற்ற மாவட்டச் செயலாளர்களும், ‘தலைவரே போறாரு. நாம சும்மா வீட்லயே இருக்கக் கூடாது’ என்று கருதி வெளியே சென்றனர். அன்பழகனும் அப்படித்தான் வீட்டில் இருந்தார். ஆனால் ஸ்டாலினே செல்லும்போது நாம் செல்லாமல் இருந்தால் நாளைக்கு கேள்விக்கு ஆளாகிவிடுவோம் என்று பல மாசெக்கள் போல ஜெ. அன்பழகனும் கிளம்பினார். கொரோனா ஊரடங்கு தொற்றுக் காலத்தில் கட்சியில் யார் பாதிக்கப்பட்டாலும் அதுபற்றி கவலைப்படாமல் ஸ்டாலின் இந்த நிவாரணப் பணிகளை அரசியல் லாபத்துக்காக செய்யச் சொல்லியிருக்கிறார் என்று ஒரு கருத்து திமுகவுக்குள்ளேயே உலவுகிறது. அது துரைமுருகன் காதுக்கும் சென்றிருக்கிறது. அதைத்தான் இப்படி தன் பாணியில் வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல பேசியிருக்கிறார் துரைமுருகன். ஏற்கனவே பொதுச் செயலாளர் பதவி என்பது கிடைக்காமல் மீண்டும் பொருளாளர் ஆக்கப்பட்ட வருத்தத்தில் இருக்கிறார் துரைமுருகன். இந்தப் பின்னணியில் அவரது பேச்சில் உள்குத்து இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது” என்கிறார்கள்.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share