துரத்தும் கொலை வழக்கு: டெல்லி கதவைத் தட்டும் திமுக எம்.பி.

Published On:

| By Balaji

கடலூர் மக்களவைத் தொகுதி திமுக எம்பியான ரமேஷ் தனது முந்திரி ஆலையில் பணியாற்றிய தொழிலாளி கோவிந்தராஜ் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் சிபிசிஐடி விசாரணையை எதிர்கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் மற்றும் வழக்கு விவகாரம் பற்றி மின்னம்பலத்தில் தொடர்ந்து புலனாய்வு செய்திகளை வெளியிட்டு வருகிறோம்.

செப்டம்பர் 26ஆம் தேதி இந்த விவகாரம் சிபிசிஐடி போலீசாரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து செப்டம்பர் 27ஆம் தேதி முதல் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் தீபா சம்பந்தப்பட்ட காடாம்புலியூர் காவல் நிலையத்தில் இருந்து தனது விசாரணையை தொடங்கி இருக்கிறார். மரணமடைந்த கோவிந்தராஜின் மகன் செந்தில்வேல் செப்டம்பர் 20ஆம் தேதி காடம்புலியூர் காவல் நிலையத்தில். “எனது தந்தையை கடலூர் எம் பி ரமேஷ் மற்றும் அவரது முந்திரி ஆலை நிர்வாகிகள் சேர்ந்து தாக்கியதில் மரணம் அடைந்திருக்கிறார்” என்று புகார் கொடுத்துள்ள நிலையில் இந்த விவகாரம் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் திமுகவின் தலைமைக்கும் போலீசாரிடம் இருந்து இந்த வழக்கு பற்றிய விவரங்கள் சென்றுள்ளது. இதையடுத்து திமுக துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை கடலூர் எம்பி ரமேஷுக்கு தொடர்பு கொண்டு உங்கள் எம்பி பதவியை ராஜினாமா செய்யுமாறு முதல்வர் கூறியுள்ளார், எனவே எம்பி பதவியை விட்டு விலகி விட்டு சட்டரீதியாக இந்த விசாரணையை எதிர் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார். இதுகுறித்து மின்னம்பலத்தில் [கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!](https://minnambalam.com/politics/2021/09/26/23/dmk-mp-ramesh-should-resign-cm-mkstalin-order-murder-case) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

ஆனாலும் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கு தனது ஒட்டுமொத்த செல்வாக்கையும் பயன்படுத்தி எம்பி ரமேஷ் எம்பி தீவிரமாக முயற்சித்து வருகிறார்.

சில நாட்களாகவே சென்னையில் முகாமிட்டிருக்கும் ரமேஷ், முதல்வர் ஸ்டாலினையும் தனக்கு நெருக்கமான உதயநிதி ஸ்டாலினையும் சந்திக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அரசியல் ரீதியாக இவர்களை சந்திக்க முடியாததால் தனது தொழிலதிபர் நண்பர்கள் மூலமாக பேசி உதயநிதியை சந்திக்க தீவிர முயற்சி மேற்கொண்டார். ஆனால் இவருக்கு சீட் வாங்கிக் கொடுத்ததில் முக்கிய பங்காற்றிய உதயநிதி இப்போது ரமேஷை சந்திக்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் சென்னையிலிருந்த நாட்களிலேயே திடீரென்று டெல்லியும் சென்று வந்திருக்கிறார் எம் பி ரமேஷ். திடீர் டெல்லி பயணம் குறித்து அவருக்கு நெருக்கமான கடலூர் வட்டாரத்தில் விசாரித்தோம்.

“தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் ரமேஷ் அண்மையில் தனது சொத்துக்களை அடமானம் வைத்து தொழிலுக்காக கடன் வாங்கியிருந்தார். அதை அவர் செலுத்தாததால் வங்கி அவருக்கு ஏல நோட்டீஸ் அனுப்பி விட்டது. இந்த ஏல நோட்டீசை தடுப்பதற்காக அவர் சில மாதங்களுக்கு முன்பே புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்திக்க முயற்சி செய்தார். ஆனால் அவரால் சந்திக்க முடியவில்லை. மேலும் புதுச்சேரி பாஜக மேலிட பொறுப்பாளரும் அப்போதைய ஒன்றிய அமைச்சருமான அர்ஜுன் ராம் மெக்வாலையும் சந்திக்க முயற்சித்தார். ஆனாலும் அவரது வீட்டில் கடந்த வாரம் வங்கியின் ஏல நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தனது சொந்த காரணங்களுக்காக பாஜகவின் உதவியை ஏற்கனவே நாடத் தயங்காத ரமேஷ் எம்பி, தன்மீது எந்நேரமும் கொலை வழக்கு தொடுக்கப்படலாம் என்ற நிலையில் தற்போது டெல்லி சென்று வந்திருக்கிறார். தன்னை தற்காத்துக்கொள்ளும் கடைசி நேர முயற்சியாக டெல்லியின் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறார்“ என்கிறார்கள்.

**-வணங்காமுடி**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share