சரியான முடிவுகளை எடுத்தோம் என பிரதமர் கூறியது குறித்து சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 14,83,157 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 33,425 நபர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்ததால், மற்ற நாடுகளை விட இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் மிகவும் குறைவாக இருந்து வருகிறது. குணமடைபவர்களின் எண்ணிக்கையும் மற்ற நாடுகளைவிட அதிகமாக உள்ளது” என்று பெருமிதம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம், பிரதமர் மோடிக்கு பல்வேறு கேள்விகளை இன்று (ஜூலை 28) முன்வைத்துள்ளார். அதில், “கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் ‘சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்தோம்’ என்று பிரதமர் பெருமைப்பட்டுக் கொள்கிறார். கீழ்க்கண்ட முடிவுகள் சரியான முடிவுகளா? அவற்றை யார் எடுத்தது? நான்கு மணி நேர முன் அறிவிப்பில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு – சரியான முடிவா?” என்று கேள்வி எழுப்பினார்.
ரயில் இன்றி, பஸ் இன்றி பல இலட்சம் மக்கள் பல நூறு கிலோ மீட்டர்கள் நடந்தே சென்று தமது சொந்த ஊர்களை அடைந்தார்களே அது சரியான முடிவின் விளைவா என்று ட்விட்டரில் குறிப்பிட்ட சிதம்பரம், பல கோடி குறு, சிறு, நடுத்தர தொழில்கள் மூடப்பட்டு இன்னும் தொடங்கப்படாமல் இருக்கின்றனவே இது சரியான முடிவுகளின் பயனா எனவும் கேட்டார்.
மேலும், “ஊரடங்கு விதிகளைத் தளர்த்திய பிறகும் வேலையிழந்த கோடிக்கணக்கானவர்கள் இன்னும் வேலையில்லாமல் இருக்கிறார்களே இதுவும் சரியான முடிவுகளின் பயனா?” என்றும் பிரதமருக்கு கேள்வியை முன்வைத்துள்ளார் சிதம்பரம்.
**எழில்**
�,