அரசுப் பள்ளிகளை முன்னேற்றுவது எப்படி? முதல்வர் நடத்திய ஆய்வு!

politics

பள்ளிக் கல்வித்துறையின் ஒட்டுமொத்த மறுமலர்ச்சியை ஒற்றை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் எனப் பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (ஜூலை 1) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாணவர்கள், ஆசிரியர்களின் நலனுக்காகப் பள்ளிக் கல்வித் துறையால் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு நலத்திட்டங்கள், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, பெருந்தொற்றுக் காலத்தில் மாணவர்களுக்கு ஆற்றிவரும் கல்விப் பணிகள், அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் ஆகியவை குறித்து இந்த ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில், அரசுப் பள்ளிகளில் குடிநீர், கழிவறை, மின்சாதன வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, பள்ளி வளாகத்தைப் பராமரிப்பது, பாதுகாப்புப் பணிகளைத் திறம்பட மேற்கொள்வது, இணைய வசதிகளைப் பள்ளிகளில் ஏற்படுத்துவது, மாணவர்களின் கற்றலில் கவனம் செலுத்தித் தமிழ்நாட்டின் கல்வித் தரத்தினை உயர்த்துவது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார்.

“தரமான அடிப்படைக் கல்வி முதல், அரசுப் பள்ளி மாணவர்களை இந்தியாவின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் இடம்பெற செய்வது வரை, பள்ளிக் கல்வித் துறையின் ஒட்டுமொத்த மறுமலர்ச்சியை ஒற்றை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

இந்த நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்யவும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியமர்த்தவும் மாவட்ட முதன்மை துறை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *