தற்போதைய கொரோனா பாதிப்பு முந்தைய பாதிப்புகளை விட மோசமாக இருக்குமோ என்று எண்ணும் அளவுக்கு தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவி வருகிறது.
இந்தியாவில் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையை அடுத்து தற்போது ஒமிக்ரான் என்ற திரிபு மூலம் மூன்றாம் அலை வேகமாகப் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு ஒன்றரை லட்சத்தைத் தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,41,986 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 21% கூடுதலாகும்.
அதுபோன்று தமிழ்நாட்டிலும் டிசம்பர் 16 அன்று 600 ஆக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு ஜனவரி 8 அன்று 10,978 ஆக அதிகரித்துள்ளது. இந்தாண்டின் தொடக்கத்திலிருந்தே தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கியது.
ஜனவரி 1 அன்று 1,489 ஆக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு, ஜனவரி 2இல் 1,594 ஆகவும், ஜனவரி 3இல் 1,728 ஆகவும், ஜனவரி 4இல் 2,731 ஆகவும், ஜனவரி 5இல் 4,862 ஆகவும், ஜனவரி 6இல் 6,983 ஆகவும், ஜனவரி 7இல் 8,981 ஆகவும், ஜனவரி 8ஆம் தேதி 10,978 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய பாதிப்பு, நேற்று முன்தின பாதிப்பை விட சுமார் 1,997 அதிகம் ஆகும். மாநிலத்தில் 20 நாட்களுக்குள்ளே தினசரி பாதிப்பு பத்தாயிரமாக அதிகரித்துள்ளது. அதாவது பாதிப்பு விகிதம் 7.9 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. பாதிப்பு பத்தாயிரமாக உள்ள நிலையில், கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உள்ளது. நேற்று 1,525 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளனர். இதில் ஆறுதல் அளிக்கும் விஷயம் என்னவென்றால் நேற்றைய தினம் கொரோனாவுக்கு 10 பேர் மட்டுமே உயிரிழந்தனர். இதுவும் பெரியது என்றாலும், பாதிப்பு எண்ணிக்கையுடன், உயிரிழப்பை ஒப்பிடும்போதும் சற்று ஆறுதல் அளிக்கிறது. மற்றொரு பக்கம், ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது.
**சென்னை**
தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில்தான் கொரோனா தொற்று மோசமாகப் பரவி வருகிறது.
சென்னையில் நவம்பர், டிசம்பர் மாதத்தில் கொரோனா பரவல் விகிதம் 1 சதவிகிதமாக இருந்தது. டிசம்பர் 30ஆம் தேதி 2 சதவிகிதமாக உயர்ந்தது. தொடர்ந்து இந்தாண்டில் அதிகரித்து தற்போது தினசரி பாதிப்பு விகிதம் 15-16 சதவிகிதமாக எகிறியுள்ளது. அதாவது, சென்னையில் தினசரி 100 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ஆயிரக்கணக்கில் தொற்று உறுதி செய்யப்படுகிறது. நேற்று மட்டுமே 5,098 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 14% பேர் மட்டுமே மருத்துவமனைகளில் உள்ளனர். இதன் காரணமாக 34% ஆக்சிஜன் இல்லாத படுக்கைகளும், 11% ஆக்சிஜன் படுக்கைகளும் நிரம்பியுள்ளன. மாநிலத்தில் மொத்தம் 7% படுக்கைகள் நிரம்பியுள்ளன.
சென்னைக்கு அடுத்தப்படியாக செங்கல்பட்டில் 1,039 பேரும், திருவள்ளூரில் 514 பேரும், கோவையில் 408 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாவட்டங்களில் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அதுபோன்று இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 20,181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 19.60 ஆக உள்ளது.
கொரோனா மூன்றாவது அலை பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதிக்குள் உச்சமடையக்கூடும் என்று சென்னை ஐஐடி எச்சரித்துள்ளது.
கொரோனா பரவலின் மூன்றாம் அலை இன்னும் உச்சத்தைத் தொடாத நிலையிலேயே இந்த பாதிப்பு என்றால், உச்சத்தை அடையும்போது பாதிப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
**-வினிதா**
�,