aமூன்று மாதங்களுக்கு இலவச சிலிண்டர்!

Published On:

| By Balaji

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி தலைமையில் காணொலி காட்சி மூலம் நேற்று (ஜூலை 8) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட பலரும் கலந்துகொண்டனர். கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதாரச் சரிவைச் சரிக்கட்டுவது, ஊரடங்கு குறித்து இதில் ஆலோசனை செய்யப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் மூலம் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் 81 கோடி பேருக்கு, தலா ஐந்து கிலோ அரிசி/கோதுமை மற்றும் குடும்பம் ஒன்றுக்கு ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்பட்டது.

ஏழை மக்களுக்குத் தொடர்ந்து ஆதரவு தேவைப்படுவதைக் கருத்தில்கொண்டு, நவம்பர் வரை கூடுதல் உணவுப் பொருட்களை வழங்க வழிசெய்யும் அன்ன யோஜனா திட்டத்தை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதை பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று தெரிவித்தார்.

நாடு முழுக்க வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் ஊழியர்கள், நிறுவனங்கள் செலுத்த வேண்டிய 24 சதவிகிதத் தொகையை அரசே செலுத்தும் திட்டமும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு செய்ய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய ஜவடேகர், “இந்தத் திட்டத்துக்கு மொத்தம் ரூ .4,860 கோடி செலவாகும். இதன்மூலம் 72 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயனடைவர்” என்றும் கூறினார்.

நகர்ப்புற புலம்பெயர் தொழிலாளர்கள் . ஏழைகளுக்குப் பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் துணை திட்டமாக, மலிவான வாடகை குடியிருப்புகளை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறினார்.

மேலும், “ஓரியண்டல் இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகிய மூன்று பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களுக்கும் ரூ.12,450 கோடி மூலதன நிதி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் உஜ்வாலா (Pradhan Mantri Garib Kalyan Yojana) திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது” என்றும் குறிப்பிட்டார். இதன் மூலம் அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவச சிலிண்டர் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share