சிஏஏ: தலைவர்களின் மௌனத்துக்கு காரணம் என்ன? -கனிமொழி

Published On:

| By Balaji

திமுக மகளிரணி சார்பில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சி பிப்ரவரி 29 ஆம் தேதி மாலை அறிவாலயத்தில் நடந்தது. இதில் ஸ்டாலினை, கங்கை கொண்ட சோழன் என்று வர்ணித்தார் கனிமொழி.

“ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழனை கங்கை கொண்ட சோழன் என்றுதான் அழைப்பார்கள். ராஜராஜனுக்கு ஆயிரம் பெருமைகள் உண்டு. இரண்டு பேரையும் சேர்த்து வைத்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல அந்த கங்கையைக் கொள்வதற்கு, மீண்டுமிந்த நாட்டிலே ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு , மதச்சார்பற்ற கொள்கைகளை இம்மண்ணிலே மீண்டும் தழைக்கச் செய்வதற்கு கங்கை கொண்ட சோழனாக தளபதி வாழ வேண்டும், வளரவேண்டும்” என்று வாழ்த்திய கனிமொழி… சிஏஏ சட்டத்துக்கு எதிராக பல தலைவர்கள் மௌனமாக இருப்பதன் காரணத்தையும் கூறினார்.

“ தனக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக மக்களை பிளவுபடுத்தும் சட்டங்களை நிறைவேற்றிவிட்டு, நாடே கொழுந்துவிட்டு எரியக் கூடிய சூழலிலே… இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் எல்லாம் திரண்டு போராடக் கூடிய நிலையிலே கூட நாங்கள் அதை திரும்பப் பெற மாட்டோம் என்று ஆணவத்தோடு சொல்லக்கூடிய ஒரு காலகட்டம் இது. டெல்லி மாநகரமே பற்றி எரியக் கூடிய ஒரு சூழலிலே இந்த நாடு இன்று நின்று கொண்டிருக்கிறது.இதையெல்லாம் பார்த்த பிறகு கூட பல தலைவர்கள் மௌனமாக நின்று கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசின் பெரும்பான்மை, அரசாங்க நிறுவனங்கள்(சிபிசி, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை) பற்றிய பயம் ஆகிய ஒரே காரணத்துக்காக பல தலைவர்கள் இந்த சிஏஏவை, மத்திய அரசின் பிரித்தாளும் சட்டத்தை எதிர்க்காமல் மௌனமாக வாய்மூடியிருக்கக் கூடிய மிக மோசமான காலகட்டத்திலே நாம் நின்று கொண்டிருக்கிறோம்.

ஆனால் மக்களுக்கு எதிராக , சிறுபான்மையினருக்கு எதிராக இந்த நாட்டை பிளவுபடுத்தக் கூடிய எந்த சட்டத்தைக் கொண்டு வந்தாலும் அதை எதிர்க்கும் முதல் குரலாக இருப்பது ஸ்டாலினின் குரல். அவர் மற்றவர்களைப் போல என்றும் அமைதியோடு இருந்ததில்லை. மற்றவர்கள் என்ன கருத்து சொல்லுகிறார்கள் என்று காத்திருந்து கருத்து சொல்லக் கூடிய தலைவர் இல்லை. ஒரு தவறு நடக்கிறது என்றால் தமிழகத்தில் இருந்து வரக் கூடிய குரல்தான் முதல் குரல் என்று சொல்லக் கூடிய அளவுக்கு இருக்கக் கூடிய தலைவர் ஸ்டாலின்” என்று குறிப்பிட்டார் கனிமொழி.

இந்த நிகழ்வில் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா, விடுதலைச் சிறுத்தைகள் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

**வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share