துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் திமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் தொகுதி போடிநாயக்கனூர்.
எளிதாக வெற்றி பெறக்கூடிய ஆண்டிபட்டி தொகுதியைக் கேட்டு அடம்பிடித்த தங்க தமிழ்செல்வனை திமுக தலைமை போடியில் போட்டியிட வைத்திருக்கிறது வேறு யார் வேட்பாளராகப் போட்டியிட்டிருந்தாலும் ஓபிஎஸ் எளிதாக வெற்றி பெற்றிருக்க முடியும்
டிடிவி தினகரன் தனி அணியாகப் பிரியும் வரை அதிமுகவில் இருந்தவர்தான் தங்க தமிழ்ச்செல்வன். எனவே ஒரே கட்சியிலிருந்த இருவர் இங்கு நேரடியாக மோதிக் கொள்கிறார்கள்.
தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிச்சாமிக்கு இணையாக எதிர்கால நலன் கருதி அதிமுக-கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓபிஎஸ் பிரச்சாரம் செய்து வருகிறார். இதன் காரணமாக ஓ பன்னீர் செல்வம் வேறு தொகுதிகளுக்குப் பிரச்சாரம் செய்யச் சென்று விடும்போது, அவரிடத்தில் இருந்து தேனி எம்.பியான பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் தீவிரமாகத் தொகுதிக்குள் பிரச்சாரம் செய்து வருகிறார்
தேனி லோக்சபா தொகுதி தேர்தலின்போது டிடிவி அணியில் போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வனை டெபாசிட் இழக்க வைத்தது போல இப்போதும் டெபாசிட் இழக்க வைக்க வேண்டும் என்று ரவீந்திரநாத் வாக்காளர்களை கரன்சி மூலம் வளைத்து வருகிறார்.
2019ல் லோக்சபா தொகுதி நடைபெற்றபோது தேனி தொகுக்கு உட்பட்ட போடிநாயக்கனூர் சட்டசபை தொகுதிக்குள், சுமார் 94 ஆயிரம் ஓட்டு வாங்கினார் ரவீந்திரநாத். 2016 சட்டசபை தேர்தலை விட இரட்டை இலைக்கு 5000 வாக்குகள் குறைவாகக் கிடைத்துள்ளது. இதை உணர்ந்து ஓபிஎஸ் தரப்பு வாக்காளர்களை ஈர்க்க பல்வேறு வகையிலும் முயன்று வருகிறது
தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய இருவருமே முக்குலத்தோர் சமூகத்தின், இருவேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களாகும். சமூக வாக்குகள் பிரிந்தாலும் தொகுதியில் பரவலாக இருக்கக்கூடிய தெலுங்கு , கன்னடம் பேசும் மக்கள், நாயுடு, செட்டியார் சாதிப் பிரிவினர், பிள்ளைமார் ஓட்டுக்கு ஓபிஎஸ், தரப்பு குறி வைத்தது. இதற்கு அடுத்து பட்டியல் சமுதாயத்தின் வாக்குகள் இங்குப் பரவலாக இருக்கிறது.
இந்த தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம்.முத்துசாமி தெலுங்கு மொழி பேசக்கூடிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த சமூக வாக்குகள் அவரால் பிரிக்கப்பட்டு விடும் என்று கருதப்படுகிறது. முக்குலத்தோர் வாக்குகளில் கணிசமான சதவீத வாக்குகள் திமுகவுக்கு இம்முறை கிடைக்கும் என கூறப்படுகிறது.
இடதுசாரி இயக்கங்களுக்குப் பலமான கட்டமைப்பு இங்கு உள்ளது மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக அணியில் இருப்பது தங்கத் தமிழ்ச் செல்வனுக்குக் கூடுதல் பலமாக உள்ளது. அந்த வகையில் அதிமுக தரப்புக்கு பெரும் செக் வைக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு இதுவரை ஆதரவாக இருந்த பிற மொழி வாக்குகளை அமமுக பிரிப்பதுடன் இந்த தொகுதியில் பன்னீர் செல்வம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் தினகரன் தீவிரமாக இருக்கிறார்.
தங்க தமிழ்செல்வன் என்கிற அரசியல் ஜென்ம எதிரியோடு மட்டுமே போராட வேண்டியிருக்கும் என களத்தில் இருக்கும் ஓபிஎஸுக்கு டிடிவி தினகரன் போடி தொகுதியில் தனக்கு எதிராகத் தேர்தல் வேலைகளைத் தீவிரப்படுத்தியதன் மூலம் இருமுனை தாக்குதலில் சிக்கிக் கொண்டிருப்பதால் வெற்றி என்பது மதில்மேல் பூனையாக
மாறிவருகிறது.
**-இராமானுஜம்**
�,