பொங்கிய அண்ணாமலை – போட்டோ போட்டு கிண்டலடித்த உதயநிதி

politics

பிரதமர் மோடி சென்னை வருகை அரசு முறை பயணம் என்றாலும், பல அரசியல் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி, முதல்வர் மு.க ஸ்டாலின் இருவரும் அரசியல் கருத்தில் எதிரெதிர் முனையில் இருப்பதால் இருவரும் ஒன்றாகத் தோன்றிய அரசியல் மேடையில் நடந்தது பாஜகவில் புகைச்சலை உண்டாக்கியிருக்கிறது.

நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த ரூ.31,400 கோடிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் வரவேற்புரையின் போது பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், “தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்” என்று சொன்னதும் தொடர்ந்து கைதட்டல் இருந்தது.

அவரை தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின் “திராவிட மாடல் என்றால் என்னவென்று கேட்கிறார்கள். சமூக நீதி, பெண் உரிமை, சுயாட்சி, சமத்துவத்தைத் தருவதுதான் திராவிட மாடல் ஆட்சி” என்றார். அதோடு ஜிஎஸ்டி நிலுவை தொகை, நீட் விலக்கு, கூட்டாட்சி போன்ற பல்வேறு விசயங்களைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு முறையும் “ஒன்றிய அரசு.. ஒன்றிய அரசு” என அழுத்தமாகப் பேசினார்.இது பாஜகவினரிடையே டென்ஷனை ஏற்படுத்தியது.

அரசு நிகழ்ச்சி முடிந்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “பிரதமர் மோடி பாஜகவின் கட்சி நிகழ்ச்சிக்காக வரவில்லை. அரசு நிகழ்ச்சிக்காக வந்திருந்தார். ஆனால், முதல்வர் முக ஸ்டாலின் அரசியல் நாடகத்தை நடத்தியிருக்கிறார். இது போட்டி அரசியலா? நேரு விளையாட்டு அரங்கத்தில் நடந்தது போட்டி அரசியல் இல்லை. பிரதமர் பதவிக்கென்று மரியாதை உள்ளது. எந்த கட்சியாக இருந்தாலும், எந்த ஆட்சியாக இருந்தாலும் மரியாதை தந்திருக்க வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்திருப்பது ஒரு வரலாற்று தவறு. அவர் தமிழக அரசு வரலாற்றில் ஒரு கருப்பு புள்ளியை ஏற்படுத்தியுள்ளார்” என்றார்.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “நாங்களும் திமுகவும் 360 டிகிரி கோணத்தில் எதிரெதிர் முனையில் இருக்கிறோம்” என்றார். இந்த வார்த்தையை பிடித்துக்கொண்ட திமுகவினர், “அதெப்படிப்பா 360 டிகிரி எதிர் எதிர்ல வரும்.. 180டிகிரி தான வரும்”ன்னு தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் போஸ்ட் போட தொடங்கிவிட்டார்கள்.

இது குறித்தான சிலாகிப்புகள் தொடர்ந்து கொண்டே இருந்த நிலையில் தான், இன்று காலை 9 மணிக்கு திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், அவருடைய ட்விட்டர் பக்கத்தில், அவரும் அவருடைய நண்பரும் அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் சிரிப்பது போன்று இருக்கிற புகைப்படத்தை பதிவிட்டார்.

உதயநிதி எதுவும் குறிப்பிடாமல் போஸ்ட் போட்டிருந்தாலும், அண்ணாமலை சொன்ன அந்த 360 டிகிரி விசயத்துக்காக தான் இந்த சிரிப்பு போஸ்ட் என்று திமுக உடன் பிறப்புகள் எல்லாம் ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இந்தசூழலில் நாம் ஒரு முடிவெடுத்தால் அது வேறுமாதிரி முடியுதே என பாஜகவினர் கொஞ்சம் அப்செட்டில் இருக்கிறார்களாம்.

**-ஜீவா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *