மெகா இணைப்பு விழா: பழனியப்பனுடன் திமுக மாவட்டப் புள்ளிகள் நெருடல்!

Published On:

| By Balaji

அண்மையில் திமுகவில் இணைந்த அமமுக துணைப் பொதுச் செயலாளராக இருந்த பழனியப்பன், தனது அரசியல் பலத்தை காட்டுவதற்காக தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அதிமுக, அமமுக, பாமக போன்ற மாற்று கட்சியினரை திமுகவில் இணைத்து பிரம்மாண்ட விழா நடத்தத் திட்டமிட்டு வருகிறார்.

அமமுக துணைப் பொதுசெயலாளரும், சசிகலா மற்றும் தினகரனின் நம்பிக்கைக்கு பாத்திரமாக கருதப்பட்டவருமான முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கடந்த ஜூலை 3 ஆம் தேதி சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.

சென்னையிலிருந்து தர்மபுரிக்கு திரும்பியதும் பழனியப்பன் வீட்டுக்கு திமுக மற்றும் அமமுகவினர் படையெடுத்தனர். இந்நிலையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பழனியப்பன் தலைமையில் இருந்து 50ஆயிரம் திமுக உறுப்பினர் படிவங்களை வாங்கிச் சென்றுள்ளார். மாவட்டத்தில் தனக்கு நம்பிக்கையான நிர்வாகிகளை அழைத்து மாவட்டம் முழுவதுமுள்ள அதிமுக, அமமுக, பாமக உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளின் அவரவர் இருந்த கட்சியின் உறுப்பினர் கார்டுகளைப் பெற்றுக்கொண்டு, திமுக உறுப்பினர் படிவத்தைக்கொடுத்து உறுப்பினர்களை சேர்த்து முடித்துவிட்டார்.

முதல்வர் ஸ்டாலினிடம் விரைவில் இணைப்பு விழா நடத்திட தேதி வாங்கி, அப்போது மாற்று கட்சியிலிருந்து வருபவர்களுக்கு திமுக உறுப்பினர் அட்டை கொடுத்து இணைப்பு விழா நடத்தவும் ஏற்பாடுகளை செய்துவருகிறார் பழனியப்பன்.

இதையறிந்த திமுக மாவட்ட முக்கிய நிர்வாகி தனது பதவி பறிபோயிடும் என்று, கழக மாவட்ட அலுவலகத்திலிருந்த பொருட்களை இரவோடு இரவாக எடுத்துக்கொண்டு போய்விட்டதாக அறிவாலயத்துக்கு தகவல்கள் சென்றுள்ளது.

அமமுகவிலிருந்த வந்த பழனியப்பனுக்கு திமுக கீழ்மட்ட நிர்வாகிகள் ஒத்துழைப்பு கொடுத்தாலும் மேல்மட்ட நிர்வாகிகள் பலரும் பழனியப்பனோடு சற்று நெருடலாகவே இருக்கிறார்கள்.

இருந்தாலும் இணைப்பு விழாவை பிரம்மாண்டமாக செய்துகாட்டவேண்டும் என்று இரவும் பகலுமாக ஓடிகொண்டே இருக்கிறார் பழனியப்பன்.

**-வணங்காமுடி**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share