ஊரடங்கிற்குப் பிறகு 50 சதவிகித பயணிகளுடன் பேருந்துகளை இயக்கலாம் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
45 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் இருக்கும் போதிலும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஊரடங்கின் காரணமாக மாநிலம் முழுவதும் பொதுப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.
இந்த சூழலில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், அனைத்து போக்குவரத்து கழகங்களின் நிர்வாக இயக்குனர்களுக்கும் நேற்று (மே 6) சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ஊரடங்கிற்குப் பிறகு பேருந்துகள் இயக்கப்படும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் சிலவற்றையும் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, பேருந்துகள் அனைத்தும் 50 சதவிகித பயணிகளுடன் மட்டுமே இயங்க வேண்டும். டிரைவர்கள் மற்றும் நடத்துனர்கள் அனைவரும் பணியில் ஈடுபடுவதற்கு முன்னர் உடல் வெப்பநிலையை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்துதான் பணியில் ஈடுபட வேண்டும்.
சமூக இடைவெளியை உறுதி செய்யும் வகையில் இருக்கைகளில் இடைவெளி விட்டு எண் குறிப்பிட வேண்டும். பயணிகள் அனைவரும் முகக்கவசம் அல்லது துணியால் முகத்தை மூடியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அவர்களை பேருந்துக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது. பேருந்தின் சன்னல்கள் அனைத்தும் கட்டாயம் திறந்திருக்க வேண்டும். ஒவ்வொரு பயணிக்கும் இடையே 6 அடி தூரம் இடைவெளி பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பேருந்து நிலைய நிறுத்தத்தில் 5 மீட்டர் இடைவெளி விட்டு பேருந்தை நிறுத்த வேண்டும். பயணிகள் வரிசையில் நின்று பேருந்தில் ஏற வேண்டும். பேருந்துகளில் சில்லரை பணப் பறிமாற்றத்தை தவிர்க்க வேண்டும். இதற்காக மாத பேருந்து பயண அட்டை, தின அட்டை ஆகியவற்றை விநியோகிக்கும் இடங்களை கூடுதலாக்கலாம். க்யூ ஆர் கோட் மூலமாகவோ அல்லது இ-பேமண்ட், பேடிஎம், கூகுள் பே, ஜியோ பே உள்ளிட்டவற்றின் மூலமாகவோ டிக்கெட் கட்டணத்தை செலுத்தலாம். ஊரடங்கு முடிந்த பின்னர் இதனை முழுமையாக கடைபிடிக்க வேண்டுமெனவும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
**எழில்**�,