அதிமுக கூட்டணியின் மூடுபனி கொஞ்சம் கொஞ்சமாக விலகிக்கொண்டிருக்கிறது. மதுரையில் நேற்று (ஜனவரி 30) பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று கூறியிருக்கிறார். இதன்மூலம் முதல்வர் வேட்பாளர் சர்ச்சைகள், தமிழக பாஜகவினரின் தனிப்பட்ட கருத்துகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நட்டா.
மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட நட்டா நேற்று இரவு பொதுக்கூட்டத்தில் பேசினார்.
“காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கான பாதுகாப்பு கேரிடார் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைக் கொடுத்திருக்கிறார்.
பிரதமர் மோடி லடாக்கில் ராணுவ வீரர்களிடையே பேசும்போதும் தமிழின் திருக்குறளை எடுத்துக் கூறினார். மேலும் 2019இல் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் தனது உரையில் பிரதமரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற தமிழ் கவிஞர் கணியன் பூங்குன்றனாரின் உலக தத்துவத்தை மேற்கோள் காட்டினார் மோடி” என்று பேசிய நட்டா,
தொடர்ந்து, “வர இருக்கிற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தான் பாஜக தொடர்கிறது. பாஜக, அதிமுக இணைந்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும். தமிழகம் தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும். அதற்கு, மக்கள் பாஜகவை ஆதரிக்க வேண்டும். தேசிய நீரோட்டத்தில் இணைந்தால்தான் தமிழ்நாட்டுக்கு மேலும் பல திட்டங்கள் கிடைக்கும்” என்று கூறினார்.
நட்டாவை மதுரையில் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அமைச்சர்கள் வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 18ஆம் தேதி டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோரை சென்று சந்தித்துவிட்டு வந்தார். அதன்பின் தமிழகம் வந்த நட்டா அதிமுக – பாஜக கூட்டணியை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
பாஜகவின் இந்தப் பொதுக்கூட்டத்தில் அதிமுகவின் முக்கிய தலைவரான எம்ஜிஆரின் முழு உருவ பேனர் வைக்கப்பட்டிருந்தபோதே நட்டா இந்த முடிவை அறிவிப்பார் என்று தோன்றியது. அதன்படியே நட்டா அதிமுக கூட்டணியை அறிவித்துவிட்டார்.
**-வேந்தன்**�,