அதிமுகவுடனான கூட்டணி தொடர்பாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா கருத்து தெரிவித்துள்ளார்.
தேமுதிக பொதுச் செயலாளரும், நடிகருமான விஜயகாந்த்தின் 68 ஆவது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அக்கட்சியினரால் வறுமை ஒழிப்பு தினமாக இன்று (ஆகஸ்ட் 25) கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமையில் அக்கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். அப்போது, துணைச் செயலாளர் சுதீஷ், விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். கொரோனா காலம் என்பதால் அவரை யாரும் சந்திக்க முடியவில்லை. அடுத்த வருடப் பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடுவோம். அனைவரும் அவரை சந்திக்கலாம்” என்று குறிப்பிட்டார்.
தமிழகம் முழுவதும் கட்சியை வலுப்படுத்துவது, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளை முடுக்கிவிட்டுள்ளோம். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு 2021 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க தேமுதிக தயாராகி வருகிறது என்று கூறிய பிரேமலதாவிடம், வரும் தேர்தலில் கூட்டணியா அல்லது தனித்துப் போட்டியா என கேள்வி எழுப்பப்பட்டது.
“தேர்தலுக்கு இன்னும் நிறையக் காலம் இருக்கிறது. இப்போதுவரை அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். ஆனால், உரிய நேரத்தில் செயற்குழு, பொதுக் குழுவைக் கூட்டி கூட்டணி பற்றி விஜயகாந்த் அறிவிப்பார். விஜயகாந்த் கிங் ஆகத்தான் இருக்க வேண்டும், தனித்துப் போட்டியிடத் தயாராக இருக்கிறோம் என மாநிலம் முழுவதும் நிர்வாகிகள் கூறுகின்றனர்.
சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாட்டை டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் வெளியிட வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்தார். முதல்வர் வேட்பாளர் பிரச்சினை என்பது அதிமுகவின் உட்கட்சி விவகாரம், அதனை அவர்கள் பேசித் தீர்த்துக்கொள்வார்கள் என்றும் கருத்து தெரிவித்தார் பிரேமலதா.
**எழில்**�,