தாதா சாகேப் பால்கே விருதினை எதிர்பார்க்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவின் உயரிய விருதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது, இந்திய சினிமாவின் தந்தையாக போற்றப்படும் தாதா சாகேப் பால்கே பெயரில் ஆண்டுதோறும் வழங்கப்படும். இவ்விருதை இதுவரை லதா மங்கேஷ்கர், சத்யஜித் ரே, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலர் பெற்றுள்ளனர். தமிழ் திரையுலகிலிருந்து சிவாஜி, கே.பாலசந்தர் ஆகியோர் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், 2019ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த்துக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக விருது வழங்கும் நடைபெறவில்லை.
தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், இவ்விருது வழங்கும் விழா நாளை (அக்டோபர் 25) டெல்லியில் நடைபெறவுள்ளது. இதற்காக ரஜினிகாந்த் டெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்நிலையில் விருது வழங்குவது குறித்து நடிகர் ரஜினி இன்று காலை தனது இல்லம் முன்பு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
“இந்த விருது எனக்குக் கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அதே சமயத்தில் இயக்குநர் கே.பாலசந்தர் இல்லையே என்று வருத்தமாக உள்ளது. விருது வாங்கி வந்த பிறகு பேசுகிறேன்” என்று கூறினார்.
இதனிடையே ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது. ஒன்று, மக்களின் அன்பினாலும், ஆதரவினாலும் திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதினை மத்திய அரசு எனக்கு வழங்கவுள்ளது.
இரண்டாவது, என்னுடைய மகள் சௌந்தர்யா விசாகன், அவருடைய சொந்த முயற்சியில் மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய “HOOTE”என்கிற APP-ஐ உருவாக்கி அதை அறிமுகப்படுத்தவுள்ளார். அதில் மக்கள் தாங்கள் மற்றவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்க விரும்பும் கருத்துக்களையும், விஷயங்களையும், இனி அவர்களது குரலிலேயே எந்த மொழியிலும் “HOOTE APP மூலமாக பதிவிடலாம்… இந்த வரவேற்கத்தக்க புதிய முயற்சியான “HOOTE APP – ஐ என் குரலில் பதிவிட்டு துவங்க உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
**-பிரியா**
�,”