தமிழ்நாடு அரசின் பயிற்சி பெற்ற 9 பேர் ஐஏஎஸ், ஐபிஎஸ் முதலிய அகில இந்தியப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை இதுகுறித்து விவரங்கள் வெளியாகின.
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அண்ணா மேலாண்மைப் பயிற்சி நிலையம் சார்ந்த போட்டித் தேர்வுப் பயிற்சி மையத்தில் ஆண்டுதோறும் ஒவ்வொரு தொகுதியினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெறுவோருக்கான தேர்வு வைக்கப்பட்டு, அதன் மூலம் தெரிவு செய்யப்படுவோர் அரசின் மானியத்துடன் தங்கவைக்கப்பட்டு உணவும் பயிற்சியும் வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வென்றவர்களில், இறுதிப்போட்டியில் வெற்றிபெற்றவர்கள் விவரம் நேற்று வெளியிடப்பட்டது.
நடப்பாண்டில் நிரப்பப்படவுள்ள 749 அகில இந்தியப் பணி காலியிடங்களில், 180 இடங்கள் இந்திய ஆட்சிப் பணி – ஐஏஎஸ், 37 இடங்கள் இந்திய வெளியுறவுத் துறை – ஐஎஃப்எஸ், 200 இடங்கள் இந்திய காவல் பணி – ஐபிஎஸ் என ஒதுக்கப்பட்டுள்ளன.
’அ’ தொகுதிப் பணிகள் எனப்படும் பிரிவுக்கு 242 இடங்களும், ’ஆ’ தொகுதிப் பணியிடங்களுக்கு 90 இடங்களும் நிரப்பப்பட இருக்கின்றன.
இவற்றுக்காக, மொத்தம் 685 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரின் பெயர்களையும் ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையம் நேற்று (மே 30) இணையதளத்தில் வெளியிட்டது.
இவர்களில் 42ஆவது இடத்தைப் பிடித்துள்ள ஸ்வாதிஶ்ரீ தமிழ்நாட்டு அரசுப் பயிற்சி மையத்தில் முதலிடத்திலும், 46ஆவது இடத்தைப் பிடித்துள்ள சி.எஸ்.ரம்யா இரண்டாம் இடத்திலும் வந்துள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் இந்திய ஆட்சிப் பணி கிடைப்பது உறுதியாகியுள்ளது.
இதே மையத்தில் படித்த மருத்துவர் சி.மதன், 195ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இவருக்கு அயலுறவுப் பணி கிடைக்க வாய்ப்பு இருக்கும் என்றாலும், இவர் காவல் பணியில் சேர்வதெனத் தீர்மானித்துள்ளார்.
அகில இந்திய அளவில் 244ஆம் இடத்தைப் பிடித்துள்ள சத்திரிய கவின், 338ஆம் இடத்தைப் பிடித்த ஏஞ்சலினா ரெனிட்டா, 400ஆவது இடத்தைப் பிடித்துள்ள எஸ்.மதிவாணன் பயிற்சி மையத்தில் 4ஆம், 5ஆம், 6ஆம் இடங்களில் வந்துள்ளனர். இவர்களுக்கு காவல் பணி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களை அடுத்து சங்கீதா 429ஆவது இடத்திலும், எஸ்.சந்தோஷ்குமார் 503ஆவது இடத்திலும், எஸ். அருண்குமார் 527ஆவது இடத்திலும் வந்துள்ளனர்.
இவர்களில் மதிவாணனும் சந்தோஷும் தமிழ் இலக்கியத்தை விருப்பப் பாடமாக எடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசுப் பயிற்சியில் 9 பேர் ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்குத் தேர்வு!
+1
+1
+1
+1
+1
+1
+1