தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் வணிக நிறுவனங்கள் செயல்படலாம் என்று அனுமதி வழங்கியுள்ள தமிழக அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளது.
தமிழகத்தில் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் 24 மணி நேரமும் செயல்படலாம் என்று கடந்த அதிமுக ஆட்சியில் 2019ஆம் ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த உத்தரவு சுமார் ஆறு மாதங்கள் அமலில் இருந்த நிலையில் கொரோனா காரணமாக குறிப்பிட்ட நேரம் மட்டுமே கடை திறந்து இருக்க வேண்டுமென்று கூறி அரசு திரும்பப் பெற்றது.
அதேசமயம் இதுபோன்று கடை திறக்கும் அனுமதி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படுவதால் கடந்த முறை வழங்கிய அனுமதி நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த உத்தரவை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனினும் சில நிபந்தனைகளை தமிழக அரசு விதித்துள்ளது.
அதில் 24 மணி நேரமும் செயல்படும் கடைகள் ஒவ்வொரு பணியாளருக்கும் சுழற்சிமுறையில் வாரத்தில் ஒருநாள் விடுமுறை வழங்க வேண்டும்.
ஊழியர்களின் தகவல்களை அனைவரின் பார்வையில் படும்படி வைக்க வேண்டும்.
நாளொன்றுக்கு 8 மணி நேர வீத அடிப்படையில் வாரத்துக்கு 48 மணி நேரத்துக்கு மேல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது.
ஒருவேளை கூடுதல் நேரம் வேலை பார்த்தால் கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும்.
இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் பணியாற்ற கூடாது. அப்படி பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால் எழுத்துபூர்வமாக அந்தப் பெண்ணிடம் சம்மதம் பெற்றிருக்க வேண்டும்.
அதோடு பணியில் இருக்கும் பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து தர வேண்டும். பணியிடங்களில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை குழுவை அமைக்க வேண்டும்.
இந்த விதிகளை மீறினால் சம்பந்தப்பட்ட கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-பிரியா**