தமிழ்நாட்டில் கடந்த மூன்றாண்டுகளில் 232 பேர் போலீஸ் காவல் மற்றும் நீதிமன்ற காவலில் உயிரிழந்துள்ளனர் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 19ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்று(ஜூலை 27) மக்களவையில் போலீஸ் காவலில் இருக்கும் போது பலியான கைதிகள் விவரங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் பதிலளித்தார்.
அதில்,” இந்தியா முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் போலீஸ் காவலில் 348 பேரும், நீதிமன்ற காவலில் 5,221 பேரும் உயிரிழந்தனர். இந்தியா முழுவதும் 2018-2019 ஆண்டில் போலீஸ் காவலில் 136 பேரும், நீதிமன்ற காவலில் 1,797 பேரும், 2019-2020ஆண்டில் போலீஸ் காவலில் 112 பேரும், நீதிமன்ற காவலில் 1,584 பேரும், 2020-2021 ஆண்டில் போலீஸ் காவலில் 100 பேரும், நீதிமன்ற காவலில் 1,840 பேரும் உயிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் போலீஸ் காவல் மற்றும் நீதிமன்ற காவலில் 232 பேர் உயிழந்துள்ளனர். 2018-19 ஆண்டில் போலீஸ் காவலில் 11 பேரும், நீதிமன்ற காவலில் 89 பேரும், 2019-20 ஆண்டில் போலீஸ் காவலில் 12 பேரும், நீதிமன்ற காவலில் 57 பேரும், 2020-21ஆண்டில் போலீஸ் காவலில் 2 பேரும், நீதிமன்ற காவலில் 61 பேரும் உயிழந்துள்ளனர்.
இதில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 1,318 கைதிகள் உயிரிழந்துள்ளனர். இதற்கடுத்த இடத்தில் மேற்குவங்கம் உள்ளது “ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,