eபோரில் 1300 வீரர்கள் பலி: உக்ரைன் அதிபர்!

politics

ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கியதிலிருந்து சுமார் 1300 உக்ரைன் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன்-ரஷ்யா போர் பதினெட்டாவது நாளாக நீடித்து வருகிறது. பல்வேறு நகரங்களைக் கைப்பற்றிய ரஷ்ய படைகள், தலைநகர் கீவ்வை கைப்பற்ற தொடர்ந்து முன்னேறி வருகிறது. ராணுவ நிலைகள் மட்டுமில்லாமல், மருத்துவமனைகள், பள்ளிக் கூடங்கள்,மசூதி, குடியிருப்பு பகுதிகளிலும் ரஷ்ய படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதனால், லட்சக்கணக்கில் மக்கள் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், மீதமுள்ளவர்கள் பதுங்கு குழியில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி, “உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதலில் இதுவரை 1300 உக்ரைன் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏற்கனவே ரஷ்ய படை ஒரு மேயரை கொன்றுள்ளது. தற்போது மெலிடோபோல் என்ற நகரின் மேயர் இவா ஃபெடரோவை கடத்திச் சென்றுள்ளார்கள். ரஷ்யப் படைகள் எந்த நகரங்களுக்குள் நுழைந்தாலும் சரி, அந்த நகரத்தின் அதிகாரத்தில் இருப்பவர்கள் அவர்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் அவர்கள் கொல்லப்படுகின்றனர். இது பயங்கரவாதம். இது ஜனநாயகத்திற்கு எதிரான குற்றம்” என்று விமர்சித்திருந்தார்.

போரை முடிவுக்கு கொண்டுவர இரு நாடுகளின் உயர் அதிகாரிகள் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.

இந்த நிலையில், நேரில் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு ரஷ்ய அதிபர் புதினுக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும், இந்த பேச்சுவார்த்தையின்போது மத்தியஸ்தம் செய்ய இஸ்ரேல் பிரதமர் நஃபதலி பென்னெட்டை ஜெலென்ஸ்கி கேட்டுக் கொண்டுள்ளதாகவும் உக்ரைன் அதிபர் மாளிகை தகவல் தெரிவிக்கின்றன.
**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *