இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

politics

அதிமுகவை செயல்படாத நிலைக்குக் கொண்டு சென்றுவிட்டு, இப்படி ஒரு கடிதத்தை அனுப்பலாமா என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுக இரு அணியாகப் பிளவுபட்டு, உட்கட்சி பூசல் பூதாகரமாகியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஜூலை 9ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்குச் சின்னம் வழங்கப் படிவம் ஏ மற்றும் படிவம் பி-யில் கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்துப் போடுவது அவசியம்.

இந்நிலையில், கையெழுத்துப் போட நான் தயார் என்று ஓ.பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் எழுதினார். ஆனால் இந்த கடிதத்தை முதலில் எடப்பாடி பழனிசாமி வாங்க மறுப்புத் தெரிவித்துவிட்டார். இதையடுத்து மீண்டும் ஈபிஎஸ் தரப்பிடம் கடிதம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தச்சூழலில் இன்று (ஜூன் 30) பிற்பகல், பன்னீரின் கடிதத்துக்குப் பதில் கடிதம் எழுதியுள்ள எடப்பாடி பழனிசாமி, அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு வணக்கம் , தங்களின் ஜூன் 29ஆம் தேதியிட்ட கடிதம் பற்றி பத்திரிகையின் வாயிலாகத் தெரிந்து கொண்டேன். பின்னர் மகாலிங்கம் வழியாகக் கடிதம் பெறப்பட்டது

கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் 2021 டிசம்பர் 1 அன்று நடைபெற்ற கழக செயற்குழுவால் கொண்டுவரப்பட்ட கழக சட்ட திட்டங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. ஆதலால் அந்த சட்ட திட்டத் திருத்தங்கள் காலாவதியாகிவிட்டது. எனவே கழக ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கது அல்ல.

உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக இருக்கும் பதவிகளுக்கு நடைபெற உள்ள தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்குக் கடைசி நாள் ஜூன் 27 அன்று முடிவுற்ற நிலையில் இத்தனை நாட்கள் பொறுத்திருந்து கழகத்தின் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையிலும், ஜூன் 27 அன்று கூட்டப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு தாங்கள் உட்பட அனைவருக்கும் முறையாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு மொத்தம் 74 தலைமைக் கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்து கொண்டனர். நான்கு பேர் உடல்நிலை சரியில்லை என்று தகவல் தெரிவித்து இருந்தனர். தாங்கள் அந்த கூட்டத்தைப் புறக்கணித்த நிலையிலும் தற்போதைய தங்களின் இந்த கடிதம் ஏற்புடையதாக இல்லை.

அதேபோல் நாம் இருவரும் கூட்டாக அழைப்பு விடுத்த கழகத்தின் பொதுக்குழுவை நடத்த விடாமல் தடுத்து நிறுத்துவதற்காக தாங்கள் ஆவடி காவல் ஆணையருக்குக் கடிதம் மூலம் புகார் அளித்தும் நீதிமன்றங்களின் மூலம் வழக்குகளைத் தாக்கல் செய்தும் அதிமுக செயல்படாத நிலைக்குக் கொண்டு செல்வதற்கான அனைத்து பணிகளையும் செய்துவிட்டு தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்புடையதாக இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியிருந்த கடிதத்தில், ஈபிஎஸை இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி பன்னீர்செல்வத்துக்கு எழுதிய கடிதத்தில் ஓபிஎஸ் பொருளாளர் என்றும் தன்னை கழக தலைமை நிலைய செயலாளர் என்றும் மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை ஈபிஎஸ் ஆதரவாளர்களான சி.வி.சண்முகம் , ஜெயக்குமார் உள்ளிட்டோர் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகிவிட்டது என கூறிவந்த நிலையில், இன்று ஈபிஎஸும் தனது கடிதத்தில் அவ்வாறே கூறியுள்ளார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *