மாமூல் வாங்கினால் குற்றவியல் நடவடிக்கை: கோர்ட் உத்தரவு!

politics

மாமூல் வாங்கும் காவல்துறையினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி இனி குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூன் 24) உத்தரவிட்டுள்ளது.

சென்னை பெரியார் நகரில் டாஸ்மாக் மதுபான கடை அருகே பெட்டிக்கடை நடத்தி வந்த ஒருவரிடம் சிறப்பு உதவி ஆய்வாளர் கே.குமாரதாஸ் வாரம்தோறும் 100 ரூபாய் மாமூல் வாங்கியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கான ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.

இதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், மனுதாருக்கு விதிக்கப்பட்ட தண்டனை அதிகமானது அல்ல என்று கூறி அவரது மனுவைத் தள்ளுபடி செய்தார்.

அதோடு, இந்த தண்டனையிலிருந்து மாமூல் வாங்குவதை காவல்துறை அதிகாரிகள் தீவிரமாகக் கருதவில்லை என்பது தெளிவாகிறது. மாமூல் வாங்குவது குற்றம் என்றாலும் அவர்களுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை மட்டுமே எடுக்கப்படுகிறது. குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

இந்த சமுதாயத்தையும் அரசின் நலத்திட்டங்கள் அமல்படுத்தப்படுவதையும் ஊழல் செல்லரிக்கச் செய்கிறது. ஊழலைத் தடுக்க அமைக்கப்பட்டுள்ள லஞ்ச ஒழிப்புத் துறையில் நேர்மையான அதிகாரிகளை நியமித்து அத்துறையை வலுப்படுத்த வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் வாங்கும் அரசு ஊழியர்கள் நேர்மையுடன் இருக்க வேண்டும். போலீசார் மாமூல் வாங்குவது மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நடைபாதை வியாபாரிகளிடம் மாமூல் வாங்கிக் கொண்டு ஆக்கிரமிக்க அனுமதிப்பதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்.

எனவே மாமூல் வாங்குவதைக் கட்டுப்படுத்த உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மட்டும் எடுக்காமல் வழக்குப்பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கையையும் எடுக்க வேண்டுமென்று நீதிபதி டிஜிபிக்கும் தமிழக அரசுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *