தேர்தல் ஆணையத்தை நாடிய பன்னீர்: எடப்பாடி ஆலோசனை!

ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூடும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 22ஆம் தேதி மதியம் 3 மணிக்கு தொடங்கி மாலை, இரவு, அதிகாலை என விடிய விடிய நடந்த சட்டப்போராட்டத்தை தொடர்ந்து நேற்று அதிமுக பொதுக்குழு கூடியது. எனினும் திட்டமிட்டபடி நேற்று எந்த நிகழ்வும் நடக்கவில்லை. பொதுக்குழு முடிந்த சிறிது நேரத்திலேயே இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் ஆகியோரை பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி செல்வம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் சந்தித்தனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.
இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் மட்டும் நேற்று இரவு தனது மகன் ரவீந்திரநாத் மற்றும் ஆதரவாளர்களுடன் டெல்லி புறப்பட்டார். அதிமுக பொதுக்குழு விவகாரம் பற்றித் தேர்தல் ஆணையத்தில் முறையிடுவதற்காக டெல்லி செல்கிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்க, “இல்லை, பாஜக அழைத்ததின் பேரில் வேட்புமனுத் தாக்கல் நிகழ்வில் கலந்துகொள்ளச் செல்கிறேன்” என்றார் ஓபிஎஸ்.
இந்நிலையில் டெல்லி சென்ற ஓபிஎஸ் தரப்பினர் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளார்.
அதில், அதிமுக சட்டவிதிகளில் திருத்தம் மேற்கொண்டு கட்சித் தலைமை பதவியை மாற்றம் செய்ய இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முயன்று வருகின்றனர். இதன் ஒருபகுதியாக மீண்டும் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவைக் கூட்ட இருக்கின்றனர். சட்டவிரோதமாக பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இன்றி அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பொதுக்குழுக் கூட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும். கட்சி விதிகளில் மாற்றம் செய்து தலைமை பதவியை மாற்றம் செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதோடு பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் மனுத் தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஓ.பன்னீர் செல்வம், பிரதமரைச் சந்திப்பதற்காக நேரம் கேட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லியில் ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ள நிலையில், சென்னையில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
-பிரியா