மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 24 ஜுன் 2022

பன்னீர்,சசிகலா, பாஜகவுக்கு எடப்பாடியின் ’பொதுக்குழு’ மெசேஜ்!

பன்னீர்,சசிகலா, பாஜகவுக்கு  எடப்பாடியின் ’பொதுக்குழு’ மெசேஜ்!

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நேற்று (ஜூன் 23) அரைகுறையாக முடிந்தபோதிலும் கட்சி ரீதியான சில உண்மைகளை முழுதாக கூறியிருக்கிறது. அதாவது ஒட்டுமொத்த மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்களில் ஒரு சிலரைத் தவிர அனைவருமே தற்போதைய இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வசம்தான் இருக்கிறார்கள் என்பதுதான் அந்த உண்மை.

கடந்த ஒரு வாரமாக ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதி காத்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக என்ற கட்சி தன்னிடம்தான் இருக்கிறது என்பதை கூட தன் வாயாமல் சொல்லாமல் நேற்றைய பொதுக்குழுக் கூட்டத்தின் மூலம் மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறார்.

நேற்று பொதுக்குழுவில் நடந்த விஷயங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பினரில் சில முக்கியமானவர்களிடம் பேசினோம்.

“நேற்றைய பொதுக்குழுக் கூட்டத்தின் மூலம் மூன்று முக்கிய திசைகளுக்கு பதில் சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. முதலாவது பன்னீர் செல்வத்துக்கு. அவர் பின்னால் கட்சி இல்லை என்ற செய்திதான் அது. அடுத்ததாக, பன்னீர்செல்வத்தின் ஓவ்வொரு முன்னேற்றத்தையும் எதிர்பார்த்துக் காத்திருந்த சசிகலாவுக்கு அழுத்தமான பதிலை சொல்லியிருக்கிறார். அதாவது பன்னீரின் பலத்தை விட இப்போது சசிகலாவின் பலம் குறைவுதான். எனவே பன்னீரும் சசிகலாவும் கை கோர்த்தாலும் ஒன்றும் ஆகப் போவதில்லை என்பதுதான் அந்த பதில்.

மூன்றாவதாக பாஜகவுக்கும் வலிமையான ஒரு செய்தியை சொல்லியிருக்கிறார் எடப்பாடி. 16 ஆம் தேதி பேட்டியளித்த பன்னீர்செல்வம், ‘பிரதமர் மோடி அறிவுறுத்தியதால்தான் துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டேன்’ என்று சொன்னார். இதன் மூலம் இன்னமும் அவர் பாஜகவின் தயவை நாடுவதை அவரே சூசகமாக வெளிப்படுத்தினார். ஆனால் ஏற்கனவே பன்னீரை ஆதரித்து சூடு பட்ட பாஜக இம்முறை மிகவும் பொறுமை காத்தது.

மேலும் சமீப நாட்களாக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அக்கட்சியினர் பலரும், ஏதோ பாஜகதான் வலிமையான எதிர்கட்சி என்பதை போல பேசிவந்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்து பன்னீர் கூட ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதிமுக ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் ஓர் உறுதியற்ற நிலையில் இருக்கிறது என்ற மாயையை உடைத்து தனது தலைமையின் கீழ் கட்சியை உறுதியாகக் கட்டியமைப்பதில் தீவிரமாக இருக்கிறார். இந்த பொதுக்குழுவின் மூலம் அவர் பன்னீர், சசிகலாவை அடுத்து பாஜகவுக்கும் தெளிவான சமிக்ஞையை கொடுத்திருக்கிறார்.

ஓ.பன்னீரைப் போல பாஜகவிடம் முழுதாக சரணடையும் நிலையில் எடப்பாடி பழனிசாமி இல்லை. அவர் பாஜகவிடம் பேசுவார். சுமுக தேர்தல் உறவைக் கூட பேணுவார். ஆனால் அதிமுகவை நடத்த பாஜகவிடம் ஆலோசனை கேட்கமாட்டார். இரட்டைத் தலைமை என்று இருப்பதால்தான் அதிமுகவுக்குள் பிற கட்சிகள் தலையிடுகின்றன. ஒற்றைத் தலைமை என்பது அதிமுகவின் உட்கட்டமைப்புக்கு மட்டுமல்ல, அதன் பழைய பிம்பத்தை மீட்டெடுப்பதற்கும் பயன்படும் என்று கருதுகிறார் எடப்பாடி. எனவேதான் கச்சிதமாக தேர்தலுக்கு இன்னும் இரு வருடங்கள் இருக்கும் நிலையில் இந்த பொதுக்குழுவை ஒற்றைத் தலைமையின் களமாக மாற்றினார்.

ஒருவேளை பன்னீர் சட்டப் போராட்டம் நடத்தும்போது இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் கூட தேர்தல் நடப்பதற்குள் சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாத்வ் வழியில் பொதுக்குழு பெரும்பான்மை மூலம் மீட்டுவிடலாம் என்பதுதான் எடப்பாடியின் கணக்கு. நேற்றைய பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அதிகாரபூர்வற்ற வகையில் அதிமுகவை கைப்பற்றி அதன் பொதுச் செயலாளார் ஆகிவிட்டார். அதிமுகவை பலப்படுத்துவது மட்டுமே எடப்பாடியின் நோக்கம்” என்று முடித்தார்கள் எடப்பாடியோடு நேற்று மாலை வரை ஆலோசனை நடத்திய பிரமுகர்கள்.

-ஆரா

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

3 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் ...

7 நிமிட வாசிப்பு

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் புகார்!

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் ...

4 நிமிட வாசிப்பு

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் முடிவு!

வெள்ளி 24 ஜுன் 2022