பன்னீர் டெல்லி சென்றது ஏன்?

கடும் அமளியுடன் முடிந்த பொதுக்குழுவைத் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று (ஜூன் 23) இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
அதிமுக பொதுக்குழு நேற்று எந்த முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தது. கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான கோஷங்கள் எதிரொலித்தன. ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று சி.வி.சண்முகம், ஜெயக்குமார், வளர்மதி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பேசினர். ஒருகட்டத்தில் கூட்டத்திலிருந்து ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அதிமுக பொதுக்குழு முடிந்த கையோடு எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் பாஜக மேலிடப் பொறுப்பாளர் சிடி ரவி மற்றும் தமிழக பாஜக தலைவர் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு இன்று (ஜூன் 24) வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இதில் கலந்துகொள்ளுமாறு அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் நேற்று இரவு பன்னீர்செல்வம் தனது மகன் ரவீந்திரநாத் மற்றும் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
விமானம் நிலையம் செல்வதற்கு முன்னதாக கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டின் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், "குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளரின் வேட்பு மனு தாக்கல் நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு வந்தது. அதனால் டெல்லி செல்கிறேன்: என்று தெரிவித்தார்.
அதிமுக விவகாரங்கள் பற்றி டெல்லி தலைமையிடம் விவாதிப்பீர்களா என்று அவரிடம் கேட்ட கேள்விக்கு, பதில் எதுவும் சொல்லாமல் புறப்பட்டுச் சென்றார்.
ஓபிஎஸ் உடன் அவரது மகன் ரவீந்திரநாத்தும் சென்றுள்ளார். அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு, வெயிட் அண்டு சி என்று மட்டும் பதில் அளித்தார்.
-பிரியா