மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 23 ஜுன் 2022

மேகதாது: தமிழக குழுவிடம் மத்திய அமைச்சர் உறுதி!

மேகதாது: தமிழக குழுவிடம் மத்திய அமைச்சர் உறுதி!

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி மத்திய நீர்வளத் துறை அமைச்சரிடம் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் தலைமையிலான குழு நேற்று மனு அளித்தது.

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு முயன்று வருகிறது. சமீபத்தில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷேகாவத்தைச் சந்தித்து, மேகதாது அணை கட்டுவதற்கான டிபிஆருக்கு அனுமதி கோரினார் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை.

அதே சமயத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹல்தர், 'ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் மேகதாது விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்' என்று தெரிவித்திருந்தார்.

இதற்குத் தமிழகத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து சட்டமன்றக் கட்சிகள் குழு டெல்லி செல்லும் என்று அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.

அதன்படி நேற்று (ஜூன் 22) நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், தமிழக அரசின் டெல்லிக்கான சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தம்பிதுரை, வைகோ, ஏ.கே.பி.சின்ராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் மத்திய நீர்வளத் துறை அமைச்சரைச் சந்தித்தனர்.

அப்போது காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கக் கூடாது என்றும் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி தரக்கூடாது என்றும் வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்தனர்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அமைச்சர் துரைமுருகன், “இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது. காவிரி நதிநீர் ஆணையத்தில் மேகதாது குறித்து விவாதிக்கக் கூடாது என்பது எங்களது முக்கிய கோரிக்கை. மேகதாது குறித்துப் பேசுவதற்குக் காவிரி நதிநீர் ஆணையத்துக்கு அதிகார வரம்பு இல்லை என்று தெரிவித்தோம். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயல்வது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணானது.

மத்திய அமைச்சர் தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் காவிரியில் கர்நாடக அரசு எந்த ஒரு அணையையும் கட்ட முடியாது என்று உறுதியளித்தார்” எனக் கூறினார்.

இதனிடையே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கேட்கும் விண்ணப்பத்தை மத்திய அரசு நீக்கியது.

அணை கட்டுவதற்காக 2019இல் கர்நாடக அரசு மத்திய அரசிடம் விண்ணப்பித்து இருந்தது. மத்திய நீர்வளத் துறை மற்றும் காவிரி ஆணையம் இறுதி செய்தால்தான் சுற்றுச்சூழல் அனுமதியை வழங்க முடியும் என்றும் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை இறுதி செய்யாமல் ஆய்வு எல்லைகளை வழங்க முடியாது என்றும் கூறி மத்திய அரசு கர்நாடகாவின் விண்ணப்பத்தைப் பரிசீலனையிலிருந்து நீக்கியுள்ளது.

-பிரியா

பன்னீர்,சசிகலா, பாஜகவுக்கு எடப்பாடியின் ’பொதுக்குழு’ மெசேஜ்! ...

5 நிமிட வாசிப்பு

பன்னீர்,சசிகலா, பாஜகவுக்கு  எடப்பாடியின் ’பொதுக்குழு’ மெசேஜ்!

அதிமுகவில் பதவி மோதல்: நேரம் பார்த்து காய் நகர்த்தும் சசிகலா ...

5 நிமிட வாசிப்பு

அதிமுகவில் பதவி மோதல்: நேரம் பார்த்து காய் நகர்த்தும் சசிகலா

பன்னீர் டெல்லி சென்றது ஏன்?

3 நிமிட வாசிப்பு

பன்னீர் டெல்லி சென்றது ஏன்?

வியாழன் 23 ஜுன் 2022