மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 23 ஜுன் 2022

பொதுக்குழுவில் பன்னீருக்கு எதிராக நடந்த பத்து சம்பவங்கள்!

பொதுக்குழுவில் பன்னீருக்கு எதிராக நடந்த பத்து சம்பவங்கள்!

அதிமுக பொதுக்குழு இன்று (ஜூன் 23) சென்னையை அடுத்துள்ள வானகரத்தில் நடந்தபோது, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை அவமானப்படுத்தும் விதமாக வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

1. ஒருங்கிணைப்பாளர் பன்னீர் பொதுக்குழு மண்டபத்துக்கு காலை 10.30 மணி வாக்கிலேயே தனது ஆதரவாளர்களுடன் வந்துவிட்டார். அவருக்கு முன்னால் வந்தால் அவரை மரபுப்படி வரவேற்க வேண்டியிருக்கும் என்பதால் அதைத் தவிர்த்து தாமதமாகவே புறப்பட்டு வரவேற்புகளைத் தாண்டி தாமதமாகவே வந்தார் எடப்பாடி பழனிசாமி. ஆக எடப்பாடிக்காக பன்னீர் காத்திருக்க வேண்டியதானது.

2. பொதுக்குழு மண்டபத்துக்கு வந்த ஓபிஎஸ், மேடையேறாமல் அருகே உள்ள ஒருங்கிணைப்பாளர் அறையில் காத்திருந்தார், ஒருமணி நேரம் கழித்தே 11.20 வாக்கில் பொதுக்குழு மண்டபத்துக்கு வந்தார் எடப்பாடி.

3. பன்னீர்செல்வம் பொதுக்குழு வளாகத்துக்குள் வரும்போது... எடப்பாடியின் ஆதரவாளர்கள், ‘துரோகி ஓபிஎஸ் ஒழிக’ என்று அவரது வாகனத்துக்கு அருகே நின்று கோஷமிட்டனர்.

4. மேடையேறிய ஓ.பன்னீர்செல்வத்துக்கு எந்த நிர்வாகியும் வணக்கம் வைக்கவில்லை.

5. எடப்பாடி பழனிசாமி மேடையேறியபோதும் பன்னீர் செல்வத்தைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை. வழக்கமாக அமர்வதுபோல அவைத் தலைவருக்கு இரு பக்கமும் பன்னீர்செல்வமும், எடப்பாடியும் அமர்ந்திருந்தாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவே இல்லை.

6. பொதுக்குழுவை தற்காலிக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் நடத்திக் கொடுக்குமாறு பன்னீர்செல்வம் முன்மொழிந்ததை வழிமொழிந்தார் எடப்பாடி. அப்போது, ‘அண்ணன் ஓ.பன்னீர் செல்வம்’ என்று சொன்னார். ஆனால் பொதுக்குழுவில் பேசிய வளர்மதி, அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன். ஜெயக்குமார், வேலுமணி உள்ளிட்ட யாரும் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரை உச்சரிக்கவில்லை.

7. தீர்மானங்களை வைகைச் செல்வன் வாசிக்கத் துவங்கும்போதே.... ஆவேசமாக வந்து திடீரென மைக்கைப் பிடித்த முன்னாள் அமைச்சரும் ராஜ்யசபா எம்பியுமான சி.வி. சண்முகம், ‘இந்த பொதுக்குழு அனைத்து தீர்மானங்களையும் நிராகரிக்கிறது... நிராகரிக்கிறது... நிராகரிக்கிறது..’ என்று சத்தம் போட்டார். அதற்கு மேல் வைகைச் செல்வன் எந்தத் தீர்மானத்தையும் வாசிக்கவில்லை.

8. சி.வி.சண்முகத்தை அடுத்து துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி மைக்கைப் பிடித்து, ’இந்தப் பொதுக்குழு அனைத்து தீர்மானங்களையும் நிராகரித்துவிட்டது. தொண்டர்களின் ஒரே தீர்மானம் ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதுதான். ஒற்றைத் தலைமை தீர்மானத்தோடு இணைத்து அடுத்து தலைமை எப்போது பொதுக்குழுவை கூட்டுகிறதோ அப்போது இந்தத் தீர்மானங்களை நிறைவேற்றலாம்‘ என்று ஆவேசமாக பேசினார். இவை அனைத்தையும் எடப்பாடி பார்த்துக் கொண்டே இருந்தார்.

9. அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் பேசிக் கொண்டிருக்கும்போதே... எடப்பாடி, கே.பி. முனுசாமி அருகே சென்று காதோடு காதாக பேசிய சி.வி. சண்முகம் உடனடியாக மைக்கைப் பிடித்து, ‘இரட்டைத் தலைமைக்கு எதிராக 2190 பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்திட்டுக் கொடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை அவைத் தலைவரிடம் கொடுக்கிறோம். இரட்டைத் தலைமையை ரத்து செய்துவிட்டு ஒற்றைத் தலைமையின் கீழ் தொண்டாற்றுவது குறித்து விவாதித்து பதிவு செய்ய வேண்டும்’ என்று சொல்லிவிட்டு அவைத் தலைவரிடம் அந்த கடிதத்தைக் கொடுத்து அழுத்தம் திருத்தமாக ஏதோ கூறினார் சி.வி. சண்முகம். இதை எடப்பாடி பார்த்துக் கொண்டே இருந்தார்.

10. இதையடுத்து புதிய பொதுக்குழு தேதியை அவைத் தலைவர் அறிவிக்க, சட்டெனெ ஓ.பன்னீரும், வைத்திலிங்கமும் தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து வெளியேறினார்கள். இது சட்டத்துக்குப் புறம்பான பொதுக்குழு என்று வைத்திலிங்கம் கோஷமிட்டார். அப்போது பன்னீர் செல்வம் மீது தண்ணீர் பாட்டில்களும், காகிதங்களும் வீசப்பட்டன. அவர் வெளியே செல்லும் வரை பன்னீரின் கார் அருகே ஓபிஎஸ் ஒழிக என்ற கோஷங்கள் ஒலித்தன.

வேந்தன்

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வியாழன் 23 ஜுன் 2022