மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 23 ஜுன் 2022

பொதுக்குழு வழக்கில் பன்னீருக்கு வெற்றி: விடிய விடிய நடந்த விசாரணை விவரம்!

பொதுக்குழு வழக்கில் பன்னீருக்கு வெற்றி: விடிய விடிய நடந்த விசாரணை விவரம்!

அதிமுகவின் பொதுக்குழு தொடர்பாக நேற்று (ஜூன் 22) இரவு உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அளித்த தீர்ப்பில், ‘பொதுக்குழு கூட்டம் நடத்த தடையில்லை. அதில் இயற்றப்படும் தீர்மானம் குறித்து உத்தரவு பிறப்பிக்க முடியாது. கட்சி உள் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது’ என்று தீர்ப்பளித்திருந்தார்.

இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு உற்சாகமாக இருந்த நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து இரவே அவசர மேல் முறையீடு செய்தார் வழக்கைத் தொடுத்தவர்களில் ஒருவரான பொதுக்குழு உறுப்பினர் சண்முகம்.

இந்த மேல் முறையீட்டு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரியின் அனுதிக்குப் பிறகு... நள்ளிரவே இரு நீதிபதிகள் அமர்வால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, வாதம் நடைபெற்றது. இதையடுத்து இன்று (ஜூன் 23) அதிகாலை அளித்த தீர்ப்பில், ‘ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர வேறு எந்தத் தீர்மானமும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படக் கூடாது’ என்று தீர்ப்பளித்திருக்கிறது உயர் நீதிமன்றம். இதனால் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆறுதல் வெற்றி கிடைத்திருக்கிறது.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் பொதுக்குழு உறுப்பினர் சண்முகத்தின் மேல் முறையீடு வழக்கு அவசர வழக்காக இன்று (ஜூன் 23) அதிகாலை 2.45 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணை சென்னை அண்ணாநகரில் இருக்கும் நீதிபதி துரைசாமியின் இல்லத்தில் நடைபெற்றது.

பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கறிஞர் அரவிந்த பாண்டியன் ஆஜரானார். எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், ராஜகோபால் ஆகியோர் ஆஜரானார்கள். மனுதாரர் சண்முகம் சார்பில் வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆஜரானார்.

மனுதாரரான சண்முகம் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், “அதிமுக பொதுக்குழுவில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட 23 தீர்மானங்களைத் தவிர ஒற்றைத் தலைமை போன்ற கூடுதல் தீர்மானங்கள் திடீரென முன் வைக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்பதுதான் தற்போது கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பாக விளங்குகிறது. அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தப் பதவிகளை பொதுக்குழுவால் மாற்றியமைக்க முடியாது. கட்சி விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடலாம். கட்சியின் அடிப்படை சட்டத்திட்ட விதிகள் மீறப்பட்டால் நீதிமன்றங்கள் தலையிட முடியும்” என்ற வாதங்களை முன் வைத்தார் வழக்கறிஞர்.

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதங்கள் முன் வைக்கப்பட்டன. “கட்சியின் அடிப்படை உறுப்பினர்களே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை தேர்ந்தெடுக்க முடியும் என்ற அதிமுகவின் சட்டவிதியை மாற்ற முடியாது. கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகத்துக்கும் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும்தான் பொறுப்பு. பன்னீர்செல்வத்திடம் கொடுக்கப்பட்ட 23 தீர்மானங்களைத் தவிர வேறு எந்தத் தீர்மானத்துக்கும் அவர் ஒப்புதல் தரவில்லை. தனி நபர்களை விட கட்சியின் விதிகளே மேலானது” என்று ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

அப்போது எடப்பாடி தரப்பு வழக்கறிஞர்கள், “விதிகளைத் திருத்த பொதுக்குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு அளித்தால் கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பு பற்றிய கேள்வி அங்கே எழாது. பொதுக்குழு உச்சபட்ச அதிகாரம் படைத்தது. கட்சி தொடர்பாக எந்த முடிவையும் பொதுக்குழுவே எடுக்கலாம். ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இல்லாமல் பொதுக்குழு எதையும் விவாதிக்க முடியாது என்ற கருத்தை ஏற்க முடியாது. பொதுக்குழுதான் இறுதியானது. 23 வரைவு தீர்மானங்கள் என்று பன்னீர்செல்வம் தரப்பு சொல்வதே தவறு” என்று வாதிட்டனர்.

இதைக் கடுமையாக எதிர்த்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர், “தீர்மானக் குழு மூலம் தயாரிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பப்பட்டு அவற்றுக்கு ஒப்புதலும் வழங்கியிருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் எடப்பாடி தரப்பு வழக்கறிஞர்களைப் பார்த்து, “அஜெண்டா இல்லாமலேயே எப்படி பொதுக்குழு நடத்த முடியும்?” என்று கேட்டனர்.

அதற்கு எடப்பாடி தரப்பு வழக்கறிஞர், “இதற்கு முன் பொதுக்குழுக்களில் அஜெண்டா வைத்து கூட்டியதில்லை. இன்று கூடும் பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர்களை பொதுக்குழு உறுப்பினர்களே தேர்வு செய்யலாம் என்றுகூட பொதுக்குழு ஒப்புதல் தரலாம். யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது” என்று கூறினார்.

அப்போது நீதிபதிகள், “அந்த 23 தீர்மானங்களைத் தவிர வேறு எழுதப்படாத தீர்மானங்கள் இருக்கின்றனவா? ஏனென்றால் பொதுக்குழுவில் என்ன தீர்மானம் நிறைவேற்றப் போகிறோம் என்பது அதன் உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்” என்று கேட்டனர்.

அதற்கு எடப்பாடி தரப்பில், “எழுதப்படாத வேறு தீர்மானங்கள் இல்லை. ஆனால் அனைவருக்கும் பேச வாய்ப்பளிக்கப்படும். அவர்கள் தங்கள் கருத்தை முன் வைக்கலாம்” என்று பதிலளித்தனர்.

பன்னீர் தரப்பில், “50 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் கட்சி போல இயங்கி வந்த கட்சி அமைப்பில் இன்று ஒரு தனிநபர் முடிவெடுத்து அதை அனைவரையும் ஒப்புக்கொள்ள வைப்பது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதைத் தடுத்து கட்சி விதிகளைக் காப்பாற்றவே பன்னீர்செல்வம் நினைக்கிறார். அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்த ஒருங்கிணைப்பாளர்களை பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் மாற்றினால் கட்சியின் அடிப்படை விதிக்கு எதிரானது” என்று வாதிட்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “தன்னிடம் முன்வைக்கப்பப்பட்ட 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் பொதுக்குழுவில் முடிவெடுக்கக் கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் கேட்கிறார். அவரது கோரிக்கையை ஏற்கிறோம். அதிமுக பொதுக்குழு கூடலாம். ஏற்கனவே வரையறுக்கப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர வேறு எந்த தனித் தீர்மானமும் நிறைவேற்றப்படக் கூடாது. பொதுக்குழுவில் எந்த விஷயம் பற்றியும் விவாதிக்கலாம். ஆனால் வரைவு செய்யப்பட்ட 1 முதல் 23 தீர்மானங்கள் தவிர்த்து வேறு எந்த முடிவும் மேற்கொள்ளக் கூடாது” என்று அதிகாலை 4.15 மணிக்கு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

தீர்ப்புக்குப் பின் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இன்று பொதுக்குழுவில் வைக்கப்பட இருக்கும் 23 தீர்மானங்கள் ஒருங்கிணைப்பாளரால் ஒப்புதல் கொடுக்கப்பட்டு அவை இணை ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. அவற்றைத் தவிர வேறு சிறப்புத் தீர்மானங்கள் எதுவும் இன்றைய பொதுக்குழுவில் நிறைவேற்றப்படக் கூடாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம். ஆனால், தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று தீர்ப்பளித்துள்ளனர். இது எங்களுக்குக் கிடைத்த வெற்றி என்பதைவிட அதிமுகவின் சட்டத்திட்ட விதிகளுக்குக் கிடைத்த வெற்றியாகும்” என்றார் திருமாறன்.

இந்த உத்தரவை அடுத்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டில் அவரது ஆதரவாளர்கள் கூடி பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடினார்கள்.

-வேந்தன்

பன்னீர்,சசிகலா, பாஜகவுக்கு எடப்பாடியின் ’பொதுக்குழு’ மெசேஜ்! ...

5 நிமிட வாசிப்பு

பன்னீர்,சசிகலா, பாஜகவுக்கு  எடப்பாடியின் ’பொதுக்குழு’ மெசேஜ்!

அதிமுகவில் பதவி மோதல்: நேரம் பார்த்து காய் நகர்த்தும் சசிகலா ...

5 நிமிட வாசிப்பு

அதிமுகவில் பதவி மோதல்: நேரம் பார்த்து காய் நகர்த்தும் சசிகலா

பன்னீர் டெல்லி சென்றது ஏன்?

3 நிமிட வாசிப்பு

பன்னீர் டெல்லி சென்றது ஏன்?

வியாழன் 23 ஜுன் 2022