மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 22 ஜுன் 2022

பொதுக்குழுவுக்குத் தடை கேட்ட வழக்கு: பன்னீர் - எடப்பாடி காரசார வாதம்!

பொதுக்குழுவுக்குத் தடை கேட்ட வழக்கு: பன்னீர் - எடப்பாடி காரசார வாதம்!

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்ட வழக்கில் ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பில் காரசாரமான விவாதம் நடந்து வருகிறது.

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நாளை நடைபெற இருக்கும் நிலையில், இதற்குத் தடை விதிக்க கேட்டு சுரேன் கே.சி.பழனிசாமி, ராம்குமார் ஆதித்தன், சண்முகம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

சுரேன் கே.சி.பழனிசாமி, ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. இது அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது. பொதுச்செயலாளரின் அதிகாரத்தை இருவருக்கும் வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாது. கடந்த டிசம்பர் மாதம் நடந்த அதிமுக உட்கட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் புதிய நியமனங்கள் மேற்கொள்ளத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.

தற்போது பொதுகுழு அறிவிக்கப்பட்ட நிலையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இந்த கூட்டத்தைக் கூட்ட தடை விதிக்க வேண்டும் என்று கூடுதல் மனுவையும் தாக்கல் செய்திருந்தனர். அதில் கடந்த ஆண்டு பொதுச் செயலாளர் பதவி கொண்டு வரப்படமாட்டாது என்று தெரிவித்துவிட்டு தற்போது மீண்டும் கொண்டு வரவுள்ளனர். கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வர தடை விதிக்க வேண்டும். செயற்குழுவால் நியமிக்கப்பட்ட தற்காலிக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் பதவியில் நீடிக்கத் தடை விதிக்க வேண்டும். கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர்களை நீக்கவும், கட்சியில் புதிய நியமனங்களை செய்யவும் தடை விதிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருந்தனர்.

இந்த வழக்கில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தங்களை இணைத்து கொண்டனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (ஜூன் 22) பிற்பகல் 3 மணியளவில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு தொடங்கியது. அப்போது மனுதாரர் சண்முகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகினார். ஓபிஎஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகினார். ஈபிஎஸ் தரப்பில் அதிமுக ஆட்சியில் தலைமை வழக்கறிஞராக இருந்த விஜய் நாராயண் ஆஜராகினார். சுரேன் பழனிசாமி தரப்பில் பி.எஸ்.ராமன் ஆஜராகினார்.

அப்போது மனுதாரர் தரப்பில் “பொதுக்குழு அஜெண்டா இல்லாமலேயே ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் தொடங்கியிருக்கிறது. பொதுக்குழுவை வழக்கமான முறையில் நடத்த ஆட்சேபனை இல்லை. ஒற்றைத் தலைமை குறித்து தீர்மானம் கொண்டு வரக்கூடாது” என்று வாதிடப்பட்டது.

ஓபிஎஸ் தரப்பில், “கடந்த டிசம்பர் மாதம் உட்கட்சித் தேர்தல் நடந்து ஒருமனதாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டதைத் தேர்தல் ஆணையமும் ஏற்றுள்ளது. இந்த பதவிக்கு 5 ஆண்டுக் காலம் உள்ளது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட இருக்கும் 23 வரைவு தீர்மானங்கள் கட்சி அலுவலகத்திலிருந்து இ-மெயில் மூலம் வந்தது. இந்த தீர்மானங்களுக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 23 தீர்மானங்களைத் தவிர வேறு எந்த அஜெண்டாவையும் அனுமதிக்க கூடாது. அதிமுக சட்ட விதிகளுக்கு எதிராகச் செயல்படமாட்டேன்” என்று வாதிடப்பட்டது.

ஈபிஎஸ் தரப்பில், ”2017ல் நடந்த பொதுக்குழுவில் விதிகள் திருத்தப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவி கொண்டு வரப்பட்டது. இந்த பதவிகள் உருவாக்கப்பட்ட போது கூட தீர்மான விவரம் முன்கூட்டியே வெளியிடப்படவில்லை. பொதுக்குழுவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், தடை விதிக்க கேட்கின்றனர். பொதுக்குழு அறிவிப்பு இருவரும் சேர்ந்துதான் ஜூன் 2ஆம் தேதி வெளியிட்டனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை விட பொதுக்குழுவுக்கே அதிகாரம் இருக்கிறது. பொதுக்குழுவில் எந்த முடிவும் எடுக்கப்படலாம். இது நடக்கும் நடக்காது எனச் சொல்ல முடியாது. எந்த விதியையும் தளர்த்தவோ, சேர்க்கவோ பொதுக்குழுவால் முடிவும். பொதுக்குழுவுக்கே அதிகாரமும் இருக்கிறது. இந்த 23 தீர்மானங்கள் இல்லாமல், தனி தீர்மானம் ஏதேனும் இருந்தால் அதையும் பொதுக்குழுவில் கொண்டு வரலாம்.

பொதுக்குழுவில் பெரும்பான்மையானவர்களின் கருத்துக்கு மதிப்பு அளிப்பது ஜனநாயகம் ஆகும். அஜெண்டா இல்லாமல் தான் ஏற்கனவே பொதுக்குழுக்கள் நடத்தப்பட்டுள்ளன. 2665 உறுப்பினர்களைக் கொண்ட பொதுக்குழுவுக்குத்தான் எந்த விதியையும் நீக்கவோ, சேர்க்கவோ அதிகாரம் இருக்கிறது. பொதுக்குழு நடக்கும் போது தனி தீர்மானம் கொண்டு வரப்படலாம், கொண்டு வராமல் இருக்கலாம் என்பதற்கான உத்தரவாதத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்க முடியாது. விதிகளை திருத்த யாரிடமும் அனுமதி வாங்கத் தேவையில்லை. தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தால் போதுமானது. நாளைய பொதுக்குழுவுக்குத் தடை விதிக்கக் கூடாது. உச்சபட்ச அமைப்பான பொதுக்குழு கட்சியை கட்டுப்படுத்தும்” என்று வாதிடப்பட்டது.

ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்ட நிலையில் 23 தீர்மானங்கள் அடங்கிய நகல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பில், எந்த உறுப்பினரும் பொதுக்குழுவில் குரல் எழுப்பலாம் என்பதற்கான விதிகளைக் காட்ட வேண்டும் என்று ஈபிஎஸ் தரப்பிடம் கேட்கப்பட்டது. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற எண்ணத்தில் பொதுக்குழுவுக்கு செல்ல முடியாது. பொதுக்குழுவில் என்ன நடக்கப்போகிறது என்பதை முன் கூட்டியே ஒருங்கிணைப்பாளருக்கு தெரியப்படுத்த வேண்டும். ஒருங்கிணைப்பாளருக்கு தெரியாமல் எந்த தீர்மானத்தையும் பொதுக்குழுவில் வைக்க முடியாது” என்றும் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் சுரேன் பழனிசாமி தரப்பில், கட்சித் தலைமை குறித்து 2017ல் திருத்தம் செய்தார்கள். 2021ல் திருத்தம் செய்தார்கள். இந்த ஆண்டும் திருத்தம் செய்ய உள்ளனர். இதற்கு அனுமதிக்க கூடாது. அனைத்து தரப்பினருக்கும் நோட்டீஸ் கொடுக்காமல் விதிகளில் திருத்தம் கூடாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் கட்சியின் விதிகளை மாற்ற அதிகாரம் இருக்கிறது. பொதுக்குழுவில் வைக்கப்படவுள்ள முன்மொழிவுகள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்குணைப்பாளர் ஒப்புதலுக்கு பின்னரே பொதுக்குழுவில் வைக்க முடியும்” என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது ஈபிஎஸ் தரப்பில், கூட்டத்தில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்பதை முன் கூட்டியே முடிவு செய்ய முடியாது” என்று வாதிடப்பட்டது.

பொதுக்குழு நடக்கட்டும், ஆனால் எந்த திருத்தமும் கொண்டு வரக்கூடாது. கட்சியின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிராக எந்த விதியும் கொண்டு வரக்கூடாது என்று மனுதாரர் ராம்குமார் ஆதித்தன் தரப்பிலும் வாதம் முன் வைக்கப்பட்டது.

அனைத்து தரப்பு சார்பிலும் காரசாரமான விவாதங்கள் 3 மணி நேரத்துக்கும் மேலாக முன்வைக்கப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்தே நீதிபதி தீர்ப்பு வழங்க இருக்கிறார்.

-பிரியா

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

புதன் 22 ஜுன் 2022