பொதுக்குழு-போலீஸ்: பன்னீரின் கடைசி அஸ்திரமும் காலியான பின்னணி!

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு அனுமதி தரக் கூடாது என்ற பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை தமிழக காவல்துறை நிராகரித்துள்ளது. அதனால் பொதுக்குழு கூட்டம் நடைபெறுவது உறுதியாகிறது.
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 23 ஆம் தேதி சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் வானகரத்தில் நடக்கிறது. இதற்கான அறிவிப்பை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்திட்டு ஜூன் 2 ஆம் தேதி கூட்டறிக்கையாக வெளியிட்டனர்.
ஆனால் ஜூன் 14 ஆம் தேதியன்று நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பின் நிலைமை மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது. அன்றைய கூட்டத்தில் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று பல மாசெக்கள் பேசினார்கள். இதை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளிப்படையாக அதிகாரபூர்வமாக பேட்டியளித்தார். இதையடுத்து, ஜூன் 16 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்பது ஜெயலலிதாவுக்கு இழைக்கும் துரோகம். மாசெக்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை என்ற சப்க்ஜெக்ட் திடீரென திட்டமிட்டு புகுத்தப்பட்டது. பொதுக்குழுவில் ஒற்றைத் தீர்மானம் நிறைவேற்றக் கூடாது’ என்று அறிவித்தார்.அதற்கு எடப்பாடி இப்போது வரை பதில் சொல்லவில்லை என்றாலும்... எடப்பாடி ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்று குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.
எடப்பாடியின் ஆதரவு அதிகரித்துக் கொண்டே போவதை உணர்ந்த பன்னீர் தரப்பு, ‘பொதுக்குழுவில் ஒற்றைத் தீர்மானம் கொண்டுவந்தால் சட்ட சிக்கல் உண்டாகும், இரட்டை இலை சின்னம் கேள்விக் குறியாகும்’ என்று எச்சரித்தனர். ஆனாலும் எடப்பாடி தரப்பு இதற்கெல்லாம் சளைக்கவில்லை.
அடுத்ததாக ஜூன் 19 ஆம் தேதி இரவு, ’பொதுக்குழுக் கூட்டத்தைத் தள்ளி வைக்க வேண்டும்’ என்று எடப்பாடிக்கு கடிதம் எழுதினார் பன்னீர். ஆனால் பொதுக்குழுவை தள்ளி வைக்கும் அளவுக்கு பிரச்சினை ஏதும் இல்லை என்று எடப்பாடி பதில் கடிதத்தை பன்னீருக்கு எழுதியதாகத் தெரிகிறது. மேலும், 20 ஆம் தேதி துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தலைமையில் வானகரம் பொதுக்குழுக் கூட்ட மண்டபத்தை ஆய்வு செய்ய குழு அனுப்பினார் எடப்பாடி. அங்கே ஆய்வு செய்துவிட்டு, ‘பொதுக்குழு திட்டமிட்டபடி எழுச்சியோடு நடக்கும்’ என்று அறிவித்தார் கே.பி. முனுசாமி.
இதன் அடுத்த கட்டமாகத்தான் வானகரத்தை உள்ளடக்கிய ஆவடி மாநகர போலீஸ் கமிஷனரிடம் பொதுக்குழுவுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று ஜூன் 21 ஆம் தேதி கடிதம் கொடுத்தார் ஓ.பன்னீர் செல்வம். பொதுக்குழு நடந்தால் சட்டம் ஒழுங்கு கெடும் என்று அவர் எச்சரித்திருந்தார். ஆனாலும் நீதிமன்ற உத்தரவுப்படி திருவள்ளூர் அதிமுக மாசெவும் முன்னாள் அமைச்சருமான பெஞ்சமின், திருவேற்காடு காவல்நிலையத்தில் போலீஸார் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் பதிலளித்திருந்தார்.
பொதுக்குழு மண்டபத்துக்குள் ஒருங்கிணைப்பாளர்களின் கார்களுக்கு மட்டுமே அனுமதி, மற்ற அனைவருக்கும் அழைப்பிதழ், பாஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் கார்கள் வேறு வேறு பார்க்கிங் இடங்களில் நிறுத்தப்பட்டு, பொதுக்குழு மண்டபத்துக்கு சிறிது தொலைவில் இருந்து நடந்துதான் வருவார்கள். எனவே போலீசாருக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது, பொதுமக்களுக்கும் எந்தத் தொந்தரவும் இருக்காது, இது உள்ளரங்கில் நடப்பதால் பொது அமைதி, சட்டம் ஒழுங்கு கெடவும் வாய்ப்பில்லை என்று பெஞ்சமின் போலீஸாரிடம் தெரிவித்திருந்தார். மேலும் பொதுக்குழு வளாகத்தில் நேற்று இரவு பன்னீர்செல்வமும், எடப்பாடியும் இருக்கும் புகைப்படங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டன. அதாவது நாங்கள் பன்னீர் செல்வத்தை எதிர்க்கவில்லை என்று எடப்பாடி சொல்வது போல கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
இதற்கிடையே நேற்று இரவு அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு அனுமதி அளிக்கலாமா என்பது பற்றி ஆளுங்கட்சி மேலிடத்துடன் போலீஸ் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. ‘அதிமுக பொதுக்குழுவை இப்போது பாதுகாப்பு காரணங்களுக்காக போலீஸ் தடை செய்தால்... அதிமுகவில் தனது ஒற்றைத் தலைமைக்கு முதல்வர் ஸ்டாலின் பயந்துவிட்டார் என்று எடப்பாடியே விமர்சனம் செய்வார். மேலும் திமுக அரசு ஓ.பன்னீரோடு சேர்ந்து எடப்பாடிக்கு எதிராக செயல்படுகிறது என்றும் விமர்சனம் வைப்பார்கள். இதனால் எடப்பாடியின் இமேஜ்தான் கூடும். அதேநேரம் பொதுக்குழுவை நடத்தினால்தான் ஓபிஎஸ் சின் முடிவு என்ன என்பது தெரியும். பொதுக்குழு நடந்தால்தான் அதை எதிர்த்து தேர்தல் ஆணையத்துக்கு செல்ல முடியும். அப்போதுதான் எடப்பாடி-பன்னீர் பிரச்சினை மேலும் சிக்கலாகும்.
மேலும் தமிழக காவல்துறையோ, நிர்வாகமோ எடப்பாடிக்கோ, பன்னீருக்கோ ஒருதலை பட்சமாக செயல்பட்டது என்ற பெயர் வேண்டாம். நீதிமன்றத்திலும் வழக்குகள் இருக்கின்றன எனவே முறையாக பாதுகாப்பை பலப்படுத்துவோம்’ என்று விவாதிக்கப்பட்டு போலீஸுக்கு அறிவுறுத்தப்பட்டது. சட்டம் ஒழுங்கு கெடாத அளவுக்கு கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பின்னணியில்தான் இன்று (ஜுன் 22) ஆவடி மாநகர போலீஸ் சார்பில் பொதுக்குழு தனியார் உள்ளரங்கில் நடப்பதால் தங்களால் தலையிட முடியாது என்றும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள். ஓ.பன்னீர் தரப்புக்கு பொதுக்குழுவை தடுத்து நிறுத்துவதற்கான கடைசி அஸ்திரமும் செயலிழந்துவிட்டது.
எடப்பாடிக்கும் பன்னீருக்கும் இடையில் ஸ்டாலின் ஆடும் ஆட்டத்தின் ஒரு பகுதிதான் இது என்கிறார்கள் உளவுத்துறை வட்டாரத்தில்.
-வேந்தன்
எடப்பாடி-பன்னீர் பஞ்சாயத்து: இடையில் ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்