மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 22 ஜுன் 2022

ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு: கூடுதல் போலீஸ் பாதுகாப்பு!

ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு: கூடுதல் போலீஸ் பாதுகாப்பு!

பொதுக்குழுவுக்கு அனுமதிக்கக் கூடாது என்று ஆவடி காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஓபிஎஸ் தரப்பில் கொடுக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவுக்குள் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இன்னும் 24 மணி நேரத்திற்குள் இந்த ஒற்றைத் தலைமை விவகாரத்துக்கு முடிவு கிடைத்துவிடும். சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி என்ற தனியார் மண்டபத்தில் நாளை நடைபெற இருக்கும் பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றத் தயார் செய்யப்பட்டிருக்கும் 23 வரைவு தீர்மானங்கள் ஓபிஎஸின் ஒப்புதலுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதுபோன்று கட்சியின் ஆண்டு வரவு செலவு கணக்கையும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஓபிஎஸிடம் வழங்கியிருக்கின்றனர்.

இதனிடையே ஓபிஎஸ் தரப்பில் பொதுக்குழுவுக்கு அனுமதிக்கக் கூடாது என நேற்று ஆவடி காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சினையைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று ஓபிஎஸின் கோரிக்கையை ஆவடி போலீஸ் நிராகரித்துள்ளது. பொது இடத்தில் நடைபெற்றால் மட்டுமே கூட்டத்திற்கு அனுமதி கொடுக்கவோ, மறுக்கவோ முடியும் என்றும், தனிப்பட்ட முறையில் கல்யாண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்குழுவைத் தடுக்க போலீசுக்கு அதிகாரம் இல்லை. நீதிமன்ற உத்தரவுப்படி முறையான பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுக்குழு நடைபெறும் இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவிலேயே இரும்புத் தகடுகள் அமைத்து தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

அதுபோன்று ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்துக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு போலீசாருடன் ஆயுதப்படை போலீசார் 30 பேர் கூடுதலாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்திலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசாரின் சோதனைக்குப் பின்னரே பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

முன்னதாக, ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக தொண்டர் ஒருவர் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

புதன் 22 ஜுன் 2022