மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 22 ஜுன் 2022

பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர்!

பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர்!

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராகத் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வேட்பாளர்களை அறிவிப்பது தொடர்பாக பாஜக கூட்டணியும், எதிர்க்கட்சிகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தன. எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் பொது வேட்பாளராக வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதுபோன்று பாஜக கூட்டணியும் வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாகத் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது. தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரது பெயர்கள் பாஜக கூட்டணி சார்பில் பேசப்பட்டன.

இதில், பெண்கள் மற்றும் பழங்குடியினர் என்ற அடிப்படையில் ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கான தேர்வில் முதன்மை இடத்தில் இருப்பதாக பாஜகவினர் கூறினர். இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் தேர்தல்: மோடியின் சாய்ஸ் யார் என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

அதன்படி திரௌபதி முர்மு தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (ஜூன் 21) பிரதமர் மோடி, பாஜக தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

குடியரசுத்தலைவர் வேட்பாளருக்கான அறிவிப்பை வெளியிட்ட பாஜக தலைவர் நட்டா, முதன்முறையாகப் பழங்குடியின பெண் வேட்பாளருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்முவை அறிவிக்கிறோம் என்று தெரிவித்தார். அவருக்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “திரௌபதி முர்மு ஜி தனது வாழ்க்கையை இந்த சமுதாயத்திற்குச் சேவை செய்வதற்கும் ஏழைகள் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். அவர் ஒரு சிறந்த ஆளுநராக பதவி வகித்தவர். நம் நாட்டின் சிறந்த குடியரசுத் தலைவராக இருப்பார் என்றும் நான் நம்புகிறேன்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1958ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாடிபோசி கிராமத்தில் பிறந்தவர் திரௌபதி முர்மு. சந்தால் என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்.

ஆசிரியராகத் தனது பணியைத் தொடங்கிய முர்மு, 1997ஆம் ஆண்டு ராய்நகர்பூர் பஞ்சாயத்து உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் போக்குவரத்துத் துறை, வணிகம், மீன்வளம் மற்றும் கால்நடை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமைச்சராக இருந்தவர் 2015 -2021 காலகட்டத்தில் ஜார்க்கண்ட் ஆளுநராகப் பதவி வகித்தார்.

இந்த நிலையில் தற்போது குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

-பிரியா

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

புதன் 22 ஜுன் 2022