மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 21 ஜுன் 2022

பொதுக்குழு பாதுகாப்பு : காவல்துறைக்கு அதிமுக பதில்!

பொதுக்குழு பாதுகாப்பு : காவல்துறைக்கு அதிமுக பதில்!

அதிமுக பொதுக்குழு பாதுகாப்பு தொடர்பாக காவல்துறையின் கேள்விக்கு அதிமுக சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு நாளை மறுதினம் நடைபெற இருக்கும் நிலையில், இதற்குத் தடை விதிக்க கேட்டு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அதேசமயத்தில் பொதுக்குழுவுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளருமான பெஞ்சமின் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், “வரும் 23ஆம் தேதி வானகரத்தில் நடைபெறும் பொதுக்குழுவில் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களாக 2,500 பேர் கலந்து கொள்ளாவார்கள் என்பதால் பாதுகாப்பு அளிக்க வேண்டும். காவல்துறை பாதுகாப்பு கேட்டு மூன்று முறை மனு கொடுத்தும், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாததால் பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பாதுகாப்பு வழங்குமாறு டிஜிபி, ஆவடி காவல் ஆணையர் மற்றும் திருவேற்காடு காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று (ஜூன் 21) விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, “பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாக காவல்துறை தரப்பில் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அதற்கு அதிமுக தரப்பில் பதில் வரவில்லை. பொதுக்குழு தொடர்பாக ஏதேனும் பிரச்சினை வரும் எனத் தெரிந்தால் கட்சி ஒருங்கிணைப்பாளர் காவல்துறையை நாடலாம்” என்று வாதிட்டார்.

ஓபிஎஸ் தரப்பில் வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், பொதுக்குழுவைக் கூட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. எனவே, அழைப்பாளராகக் கலந்து கொள்ள இருக்கும் பெஞ்சமின் இந்த வழக்கைத் தொடர அதிகாரம் இல்லை. இம்மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

அப்போது பெஞ்சமின் பொதுக்குழு உறுப்பினர் இல்லையா என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு, பொதுக்குழு உறுப்பினர் என்றாலும் பாதுகாப்பு வழங்கக் கேட்டு வழக்குத் தொடர முடியாது. பொதுக்குழு கூட்டுவதில் உள்ள பிரச்சினைகள் குறித்து காவல்துறையிடம் மனு அளிக்க இருக்கிறோம் என்று வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் கூறினார்.

இதையடுத்து மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், பொதுக்குழுக் கூட்டத்திற்கு வரும் 2600 பேருக்கு அடையாள அட்டை மற்றும் வாகனங்களுக்கான பாஸ் வழங்கப்படும் என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, காவல்துறையின் கேள்விகளுக்கு அதிமுக தரப்பில் இன்று மதியத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். பெஞ்சமின் அளிக்கும் பொதுக்குழு அட்டவணை, ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் அளிக்கும் மனு என அனைத்தையும் ஆராய்ந்து முடிவெடுக்க காவல்துறைக்கும் உத்தரவிட்டார்.

எம்.பி., எம்.எல்.ஏ., என யாராக இருந்தாலும் உரிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அனைத்து தரப்புக்கும் தகுந்த பாதுகாப்பு அளித்து சட்ட ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என காவல்துறைக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தார்.

இந்நிலையில், காவல்துறை கேட்ட கேள்விகளுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி அதிமுக சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. காவல்துறை கேட்ட 31 கேள்விகளுக்கான பதிலை திருவேற்காடு காவல்நிலையத்தில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் அளித்தார்.

-பிரியா

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

செவ்வாய் 21 ஜுன் 2022