எடப்பாடி மௌனம் ஏன்? பெருகும் கேள்விகள்!

ஒற்றைத் தலைமையை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் திட்டவட்டமாக எதிர்த்த பின்னரும், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமியோ, அவரது தரப்பினரோ எந்த பதிலையும் வெளிப்படுத்தவில்லை. “எனக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் எந்த ஈகோவும் கிடையாது” என்று பன்னீர்செல்வம் தெரிவித்த பின்னரும் எடப்பாடி இன்று வரை பன்னீரை சந்திக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்விகள் அதிமுக தொண்டர்கள் மத்தியில் எழுந்திருக்கின்றன. இதை சில மாவட்டச் செயலாளர்களும் கேள்வியாகவே எழுப்பியுள்ளனர்.
நேற்று பன்னீர்செல்வத்தைச் சந்தித்த பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “கட்சி நலன் கருதி ஓபிஎஸ் இந்த முடிவை எடுத்திருக்கிறார். ஆனால், இதுவரை இணை ஒருங்கிணைப்பாளர் ஒற்றைத் தலைமை ஏன் தேவை என்று உங்களிடமும் சொல்லவில்லை, மாசெக்களிடமும் சொல்லவில்லை. இதுவரை அவர் மௌனம் காப்பது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்.
இதேபோல முன்னாள் அமைச்சரும் திருச்சி மாவட்டச் செயலாளாருமான வெல்லமண்டி
நடராஜன், “நான் பேசுவதற்கு தயார் என்று ஒருங்கிணைப்பாளர் அறிவித்தும் இணை ஒருங்கிணைப்பாளர் இதுவரை அதைப் பற்றி எதுவுமே பேசவில்லை. அதனால்தான் தொண்டர்கள் பதைபதைக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.
பொதுக்குழுவில் நிறைவேற்றுவதற்காக 17 தீர்மானங்கள் தற்போதுவரை வரையறுக்கப்பட்டு வரும் நிலையில், அதில் ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் இல்லை. ஆனால் பொதுக்குழு கூட்டத்தில் திடீரென தனித் தீர்மானமாக ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானத்தைக் கொண்டுவர எடப்பாடி திட்டமிட்டிருக்கிறார் என்று தகவல்கள் கசிகின்றன.
-வேந்தன்