மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 18 ஜுன் 2022

மேகதாது விவகாரம்: டெல்லி செல்லும் துரைமுருகன்

மேகதாது விவகாரம்: டெல்லி செல்லும் துரைமுருகன்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக குழு டெல்லி செல்லும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகம் - கர்நாடக இடையே மேகதாது விவகாரம் தீராத பிரச்சினையாக இருந்து வருகிறது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என தமிழகம் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. ஆனால் கர்நாடக மாநிலத்தில் எத்தனை முதல்வர்கள் மாறினாலும் அனைவரும் மேகதாது அணை கட்டுவதற்குத் தீவிரம் காட்டி வருகின்றனர்.

நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, “இன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்தேன். நீர்ப்பாசனம் தொடர்பாகவும் மேகதாது அணை விவகாரம் குறித்தும் பேசினேன். மேகதாது அணை கட்டுவதற்கான டிபிஆருக்கு ஒப்புதல் அளிக்க மேல்முறையீடு செய்துள்ளோம்” என்று கூறினார்.

அதுபோன்று கல்லணையில் நேற்று ஆய்வு மேற்கொண்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹல்தர், “வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் மேகதாது விவகாரம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்” என்றார்.

அப்போது அவரிடம், தமிழக அரசு மற்றும் காவிரி படுகை விவசாயிகள் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கிறார்களே என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “காவிரி நீர் மேலாண்மை ஆணையம் சுதந்திரமான அமைப்பு. காவிரி தொடர்பான பிரச்சனைகள் குறித்த விவாதங்களை நடத்தவோ, கைவிடவோ யாரும் நிர்ப்பந்திக்க முடியாது. நாங்கள் எந்த மாநிலத்திற்கும் ஆதரவாக இல்லை” என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில், காவிரி உரிமையைப் பெறுவதில் எந்த அளவுக்குச் சென்றும் கூட தமிழக அரசு போராடும். தனது உரிமையைத் தமிழக அரசு நிலைநாட்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசின் செயல்பாடு தமிழக உழவர்களுக்கான மாபெரும் துரோகம் என்று தெரிவித்துள்ள முதல்வர், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பிரதமரிடம் வலியுறுத்தியிருப்பதாகத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதில், “காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கக் கூடாது என்பது தான் தமிழக அரசின் நிலைப்பாடு. மேகதாது அணை கட்டக்கூடாது என்று சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் கர்நாடக அரசு தனது பிடிவாதமான செயல்களிலிருந்து பின்வாங்காமல் இருக்கிறது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், கர்நாடக அரசின் மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்ற செய்தி வெளியானதும், கடந்த 13ஆம் நாளன்று பிரதமருக்கு ஒரு அவசரக் கடிதம் அனுப்பி இருக்கிறேன். அதில், “நீண்டகால சட்டப்போராட்டத்திற்குப் பின்னரே கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காவிரி நதிநீர்ப் பகிர்வுக் குறித்த தனது தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வெளியிட்டது. அந்தத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வழங்கப்படும் தண்ணீர் தங்கள் எதிர்பார்ப்பிற்கும் தேவைக்கும் போதுமானதாக இல்லை என்ற சூழலில், கிடைக்கும் தண்ணீருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கர்நாடக அரசின் நடவடிக்கை தமிழகத்தைப் பொருத்தவரை மிக முக்கியமான பிரச்சனை ஆகும்.

மேகதாது அணை கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு ஏற்கெனவே தொடர்ந்த 3 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த 7-ம் தேதி மேலும் ஒரு புதிய மனு உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அதிகார வரம்பு குறித்த முக்கியமான கேள்விகள் இந்த வழக்குகளில் கேட்கப்பட்டிருப்பதாகவும் அதில் நான் குறிப்பிட்டு இருந்தேன். எனவே, மேகதாது திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கக் கூடாது என காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு மத்திய ஜல்சக்தி துறைக்கு பிரதமர் அறிவுறுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தேன்.

கர்நாடக முதல்வர் மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கைக்குத் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்து இருந்தார். "உச்ச நீதிமன்றத்தில் இப்பிரச்சினைக் குறித்த வழக்குகள் நிலுவையிலுள்ள போது, கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சிகள் மேற்கொள்வது சட்டத்திற்குப் புறம்பானதாகும். ஆகையால், உச்ச நீதிமன்றம் இப்பிரச்சனைக்குத் தீர்வு அளிக்கும்வரை மேகதாதுவில் அணைக் கட்டும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்" என கர்நாடக முதல்வருக்கு அறிவுறுத்தி இருந்தார் அமைச்சர் துரைமுருகன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை கட்டும் திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என்று ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தஞ்சாவூரில் பேட்டி அளித்து இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இப்படி தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறதா? உச்ச நீதிமன்றத்தில் ஒரு விவகாரம் வழக்காக இருக்கும்போது அதனை விவாதிக்கும் அதிகாரம் ஆணையத்துக்கு இல்லை. அது தெரிந்தும், விவாதிப்போம் என்று ஆணையத்தின் தலைவர் சொல்வது சட்டவிரோதமானதாகும்.

இதுதொடர்பாக தமிழக மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை மத்திய அரசுக்கு உணர்த்துவதற்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் குழு டெல்லி செல்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து வலியுறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இக்குழு டெல்லி சென்று மத்திய அமைச்சரைச் சந்திப்பதற்கான நேரம் கேட்கப்பட்டுள்ளது. விரைவில் இக்குழு டெல்லி செல்லும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டெல்லி சென்றுள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக வந்துள்ளதாகச் சொல்லி இருக்கிறார்கள். கர்நாடக அரசின் அழுத்தத்துக்கு மத்திய பாஜக அரசு பணியக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். கூட்டாட்சியின் மாண்பைக் காக்கும் வகையில் பாஜக அரசின் செயல்பாடுகள் அமையும் என எதிர்பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

-பிரியா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

சனி 18 ஜுன் 2022