மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 16 ஜுன் 2022

அதிமுக பொதுக்குழு: நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக பொதுக்குழு:  நீதிமன்றம் உத்தரவு!

வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை கேட்டுத் தொடரப்பட்ட வழக்கு ஜூலை 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூன் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூடுகிறது. அதற்கு முன்னதாக ஜூன் 14ஆம் தேதி சென்னை தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது. அதோடு கட்சி அலுவலகத்துக்கு வெளியேவும் ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். இந்த விவகாரம் அதிமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகேயுள்ள ஆவிலிபட்டி பகுதியில் வசிக்கும் அதிமுகவைச் சேர்ந்த எஸ்.சூரிய மூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில் அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017ஆம் ஆண்டு கட்சியின் விதிகளுக்கு முரணாகக் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த பதவிகளை ஏற்று எந்தவொரு ஆவணத்தையோ, கடிதத்தையோ தேர்தல் ஆணையம் கட்சிக்குத் தரவில்லை.

அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் தலையிடத் தேர்தல் ஆணையத்திற்கு உரிமையில்லை. சிவில் நீதிமன்றத்திற்குத்தான் உரிமை உள்ளது என்று கட்சித் தொடர்பான வழக்கு ஒன்றில் 2020ல் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதுபோன்று, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எந்த உரிமையியல் நீதிமன்றமும் அங்கீகரிக்கவில்லை. அதிமுக பொதுச் செயலாளர் பதவியை நீக்கியது சரிதான் என்றும் எந்த நீதிமன்றமும் தெரிவிக்கவில்லை.

எனவே விதிமுறைகளுக்கு முரணாக வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதி எஸ்.பிரியா, அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இந்நிலையில் மனுதாரர் சூர்யமூர்த்தி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் இல்லாததால் உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது. அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் பொதுக்குழுக் கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளதால் வழக்கை முன் கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், வழக்கு குறித்து சூரிய மூர்த்தி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

-பிரியா

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

வியாழன் 16 ஜுன் 2022