மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 11 ஜுன் 2022

குடியரசுத் தலைவர் தேர்தல்-எதிர்க்கட்சிகளை அழைக்கும் மம்தா: சோனியா செல்வாரா? 

குடியரசுத் தலைவர் தேர்தல்-எதிர்க்கட்சிகளை அழைக்கும் மம்தா: சோனியா செல்வாரா? 

குடியரசுத்  தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18 ஆம் தேதி நடக்க இருக்கும் நிலையில்,  இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக பொது வேட்பாளரை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ராஜ்யசபா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன  கார்கே மூலமாக அனைத்து எதிர்க்கட்சித்  தலைவர்களுடன் பேசி பொதுவேட்பாளரை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.இந்த நிலையில் மேற்கு வங்காள முதல்வரும்  திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக ஜூன் 15 ஆம் தேதி டெல்லியில் ஒரு கூட்டத்தைக்  கூட்டியிருக்கிறார்.  டெல்லி அரசியலமைப்பு கிளப்பில் நடைபெறும் இந்த கூட்டத்துக்காக காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட  பிற கட்சித் தலைவர்களையும், பாஜக அல்லாத மாநில முதல்வர்களையும் அழைத்திருக்கிறார் மம்தா பானர்ஜி.

அந்தக் கடிதத்தில்,  “ வலுவான ஜனநாயக தன்மை கொண்ட தேசத்திற்கு வலுவான மற்றும் பயனுள்ள எதிர்க்கட்சி தேவை. இந்நாட்டில் உள்ள அனைத்து முற்போக்கு சக்திகளும் ஒன்றிணைந்து இன்று நாட்டை ஆட்டிப்படைக்கும் பிரிவினை சக்தியை எதிர்க்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர்கள்  ஒன்றிய அரசின் பல்வேறு ஏஜென்சிகளால் வேண்டுமென்றே குறிவைக்கப்படுகிறார்கள், சர்வதேச அளவில் நாட்டின் இமேஜ் இழிவுபடுத்தப்படுகிறது. இந்த நிலையில் நமது வலுவான எதிர்ப்பைக் காட்ட வேண்டிய நேரம் இது. குடியரசுத் தலைவர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிரான வலுவான எதிர்ப்பைக் காட்டும் முயற்சியில்  ஜூன் 15 ஆம் தேதி (புதன்கிழமை) மாலை 3 மணி முதல்  டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில்  திருணமூல் காங்கிரஸ் சார்பில் ஒரு கூட்டத்தைக் கூட்டியிருக்கிறோம்.  இதில் பங்கேற்று தங்கள் ஆலோசனைகளை வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார் மம்தா. 

 தமிழக முதல்வர் ஸ்டாலின், டெல்லி முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதல்வர்  பினராயி விஜயன், ஒடிசா முதல்வர்  நவீன் பட்நாயக், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மகாராஷ்டிர முதல்வர்  உத்தவ் தாக்கரே,  ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பஞ்சாப் முதல்வர்  பகவந்த் சிங் மான்  ஆகிய முதல்வர்களுக்கும்...

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ், இந்திய கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர்  டி. ராஜா, மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர்  சீதாராம் யெச்சூரி, சமாஜ்வாதி கட்சித் தலைவர்  அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்  சரத் பவார்,  ராஷ்டிரிய லோக் தள் தலைவர் ஜெயந்த் சவுத்ரி, மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர்  குமாரசாமி, முன்னாள் பிரதமர்  எச்.டி.தேவே கவுடா,  தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர்  ஃபரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முஃப்தி ,  சிரோமணி அகாலி தள தலைவர் எஸ் சுக்பீர் சிங் பாதல், சிக்கிம் ஜனநாயக முன்னணி தலைவர் பவன் சாம்லிங்,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார் மம்தா பானர்ஜி.

மம்தா கூட்டியிருக்கும் இந்தக் கூட்டத்துக்கு சோனியா செல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை  பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வேந்தன்

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

சனி 11 ஜுன் 2022