மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 10 ஜுன் 2022

அன்புமணி போராட்டம்: அவசர சட்டத்துக்கு குழு அமைத்த அரசு!

அன்புமணி போராட்டம்:  அவசர சட்டத்துக்கு குழு அமைத்த அரசு!

ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்து அவசர சட்டம் இயற்ற தமிழக அரசு குழு அமைத்துள்ளது.

ஆன்லைன் ரம்மி விளையாடும் போது ஒரு சில ஆட்டங்களில் மட்டும் வெற்றி கிடைக்கும். முதலில் வெற்றி பெறுவார்கள், ஆனால் அடுத்தடுத்து பணம் கட்டி விளையாடும் போது தோல்வியே பரிசாகக் கிடைக்கும். ஏனென்றால் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளின் மென்பொருள்கள் ஏற்கனவே வடிவமைக்கப்பட்டவையாகும். இதில் பணம் கட்டி ஏமாந்த பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையானது . இதனால் கடந்த அதிமுக ஆட்சியில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுக்கு தடை விதித்து 2020 நவம்பர் மாதம் சட்டம் இயற்றப்பட்டது.

ஆனால் ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் இந்த சட்டத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், ஒட்டு மொத்தமாக ஆன்லைன் விளையாட்டுகளுக்குத் தடை விதிக்க முடியாது. எனவே 2020ல் இயற்றப்பட்ட சட்டம் ரத்து செய்யப்படுகிறது. புதிய சட்டத்தைக் கொண்டு வர எந்த தடையும் இல்லை என்று 2021 ஆகஸ்ட்டில் தீர்ப்பு வழங்கியது.

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பல பேர் ஆன்லைன் ரம்மியில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டனர். இதனால் உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும் என்று அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.

புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸ், சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்திற்கு அருகில் வரும் 10ஆம் தேதி காலை 11.00 மணிக்கு ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க அவசர சட்டத்தை கொண்டு வர போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, இன்று போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அன்புமணி ராமதாஸ், கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொண்டனர். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற பதாகைகளை கையில் ஏந்தி கோஷமிட்டனர்.

“தமிழக அரசே ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டு வா” என்ற வாசகம் அடங்கிய பதாகையை கையில் வைத்துக்கொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ், “மதுவை எதிர்த்து, போதைப் பொருட்களை ஒழிக்க பாமக தொடர்ந்து போராடி வருகிறது. ஆன்லைன் சூதாட்டம் இளைஞர்களின் வாழ்க்கையை பாதிக்கக் கூடிய ஒரு சாபக் கேடு. எத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. எத்தனை குடும்பங்கள் சீரழிந்திருக்கிறது. இதனால் முதற்கட்டமாக எனது தலைமையில் இன்று போராட்டம் தொடங்கியிருக்கிறது.

2020ல் தடை சட்டம் கொண்டு வருவதற்கு முன்னதாக 60 பேர் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்திருக்கின்றனர். அதன்பின் தடை சட்டம் அமலிலிருந்த காலத்தில் ஒரு தற்கொலை கூட தமிழகத்தில் நடக்கவில்லை. ஆனால் என்று தடை செய்யப்பட்டதோ அன்று முதல் இன்று வரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். இவை நமக்கு தெரிந்த தகவல். இன்னும் தெரியாமல் எத்தனை பேர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்களோ. எனவே இதை தடை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே, ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்த அவசரச் சட்டம் இயற்ற ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையில் குழு அமைத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஆன்லைன் ரம்மியால் ஈர்ப்பக்கட்டு பணத்தை இழந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் துயரமான நிகழ்வுகள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. இதுதொடர்பாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டமானது தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

அதில், ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், இவ்விளையாட்டுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரியத் தரவுகளுடன் ஆராயவும், இவ்விளையாட்டுகளை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை கூர்ந்தாய்வு செய்து, அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும்,

இரண்டு வாரங்களுக்குள் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனரும் உளவியலாளருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார், காவல்துறை கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடே ஐபிஎஸ் ஆகியோர் அடங்கிய குழு அமைக்க முடிவெடுக்கப்பட்டது.

இக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் இச்சமூகப் பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காண வேண்டிய அவசியம் கருதி, அவசரச் சட்டம் விரைவில் இயற்றப்படும். இதன் மூலம் இச்சட்டம் பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டிடும் வகையில் முன் மாதிரிச் சட்டமாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழு அமைக்கப்பட்டதோடு ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்த அவசரச் சட்டம் தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்த முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

-பிரியா

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

வெள்ளி 10 ஜுன் 2022