மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 10 ஜுன் 2022

தற்கொலைக்கு முயன்ற இலங்கைத் தாய்! இந்தியாவின் உதவிகள் எங்கே செல்கின்றன?

தற்கொலைக்கு முயன்ற இலங்கைத் தாய்!  இந்தியாவின் உதவிகள் எங்கே செல்கின்றன?

நடிகை நயன்தாராவின் திருமணத்தில் என்னென்ன விருந்து பரிமாறப்பட்டது என்பதை நம்மூர் மீடியாக்களில் செய்தியாக படித்து சலித்துப் போகும்போதுதான், இலங்கை பத்திரிகையாளர்கள் பகிர்ந்த இன்னொரு செய்தியைப் படித்து மனது கனத்துப் போகிறது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டம், வன்முறை, பிரதமர் ராஜபக்சே பதவி விலகல், புதிய பிரதமராக ரணில் பதவியேற்பு என்பதோடு இலங்கையை பற்றிய பார்வையை நாம் கடந்து சென்றுகொண்டிருக்கிறோம். அதேநேரம் இந்தியா கோடிக்கணக்கான டன் அரிசி, பால் பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான உணவுப் பொருட்களையும், மருந்துப் பொருட்களையும் இலங்கைக்கு அனுப்பி வைத்திருக்கிறது, அனுப்பிக் கொண்டும் இருக்கிறோம்.

ஆனால் நாம் அனுப்பும் உணவுப் பொருட்கள் எல்லாம் அங்கே உரியவர்களுக்கு தேவையானவர்களுக்கு சென்று சேரும் விநியோகப் பொறிமுறை (DISTRIBUTION MECHANISM) ஒழுங்காக செயல்படுகிறதா என்ற சந்தேகத்தை எழுப்புகின்றன இலங்கையில் இருந்து வரும் செய்திகள்.

கொழும்பைச் சேர்ந்த பத்திரிகையாளர் ராமச்சந்திர சனத் இன்று (ஜூன் 10) தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ஒரு தகவல் அதிர்ச்சி தருவதாக இருக்கிறது.

“பிள்ளைகளுக்கு வழங்க உணவு இல்லை! தாய் எடுத்த விபரீத முடிவு!! விழிநீர் பெருக்கெடுக்கிறது!! உணவு வழங்க வழியில்லாததால், தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட்டினியில் வாடுவதை கண்டு, அதனை சகித்துக்கொள்ள முடியாத, தாயொருவர் தற்கொலைக்கு முயற்சித்த பெருந்துயர் சம்பவமொன்று வெல்லவாய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நச்சு தன்மையுடைய விதைகளை இடித்து, அதனை அருந்தி தற்கொலைக்கு முயற்சித்த அந்த தாய், தற்போது பதுளை வைத்தியசாலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார். 4, 8 மற்றும் 9 வயதுகளில் இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். தந்தைக்கும் நிரந்தர தொழில் இல்லை. சுமார் 3 நாட்களாக நீரை மட்டுமே அருந்தி இவர்கள் உயிர்வாழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் பிள்ளைகள் பட்டினியில் தவிப்பதை, தாங்கிக்கொள்ள முடியாத தாய், தற்கொலை எனும் தவறான முடிவை நாடியுள்ளார். அவரை காப்பாற்றுவதற்காக வைத்தியர்கள் தற்போது போராடிக்கொண்டிருக்கின்றனர்.

உணவு இல்லை என்ற காரணத்துக்காக ஒருவரின் உயிர் பிரிகின்றதெனில், அதனை எப்படியும் சகித்துக்கொள்ள முடியாது. அந்த குற்ற உணர்வு எம்மையும் ஏதோவொரு விதத்தில் மெல்லக் கொல்லும்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் தாயின் கணவருடன் இன்று காலை கதைத்தேன். பிள்ளைகள் தனது மாமியின் அரவணைப்பில் தற்போது இருப்பதாக கூறினார். இப்படியான தவறான முடிவை எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டேன். அவரின் தொலை பேசி இலக்கம் - 0761040036 முடிந்தால் அந்த குடும்பத்துக்கு ஏதாவது உதவி செய்யவும். உதவி வழங்கும் முன்னர் உரிய வகையில் உறுதிப்படுத்திக்கொள்ளவும்” என்று திவயின என்ற சிங்கள மொழிப் பத்திரிகையில் வெளிவந்த செய்தியை ,மேற்கோள் காட்டி பகிர்ந்துள்ளார் பத்திரிகையாளர் சனத்.

உவா மாகாணத்தில் இருக்கும் வெல்லவாய பகுதியில் தாய் தன் மூன்று குழந்தைகளுக்கும் உணவு இல்லாததால் விஷத்தை சாப்பிட்டிருக்கிறார். ஆனால் இலங்கை அரசியலிலோ இரட்டைக் குடியுரிமை பற்றிய விவாதம் சூடாக நடந்துகொண்டிருக்கிறது. நாம் அனுப்பும் உணவு பசியால் துடிக்கும் இலங்கையின் வயிறுகளுக்கு செல்ல வேண்டும். அதை இலங்கையிலுள்ள இந்திய தூதரகம் கண்காணிக்க வேண்டும். யுனிசெஃப் போன்ற ஐ.நா. நிறுவனங்களும் இதில் உதவ வேண்டும்.

-வேந்தன்

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வெள்ளி 10 ஜுன் 2022