மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 10 ஜுன் 2022

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி. யு.கே.ஜி மீண்டும் செயல்படுமா?

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி. யு.கே.ஜி மீண்டும் செயல்படுமா?

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து இயங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை நேற்று அறிவித்தது.

2018ஆம் ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம், ஊரடங்கு காரணமாக எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரியாத நிலை ஆகிய காரணங்களால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்தது.

மழலையர் வகுப்புகளுக்கே பல ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கும் தனியார் பள்ளிகளைக் காட்டிலும் அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளில் தங்களது குழந்தைகளைப் பெற்றோர்கள் சேர்த்து வந்தனர்.

இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் கல்வித்துறை சார்பில் 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படாது என்று கூறப்பட்டது. இந்த அறிவிப்பு பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதோடு, தமிழக அரசியல் கட்சித் தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம் , அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து, அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் நிறுத்தப்படவில்லை. அரசுப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இருந்த எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும், அங்கன்வாடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் விளக்கமளித்தார்.

இருப்பினும் அங்கன்வாடி மையங்களில் உள்ள அமைப்பாளர்களால் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளை நடத்த முடியுமா என கேள்வி எழுப்பிய கல்வியாளர்கள் மீண்டும் அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளைக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் 2,381 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்குள் அமைந்த அங்கன்வாடி மையங்கள் பரிசோதனை அடிப்படையில்எல்.கே.ஜி. யு.கே.ஜி வகுப்புகளாக மாற்றப்பட்டு, சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. முந்தைய ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருந்த காரணத்தால், கூடுதல் எண்ணிக்கையிலிருந்த ஆசிரியர்கள் எல்.கே.ஜி. யு.கே.ஜி வகுப்புகளை எடுக்க அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால், அரசுப் பள்ளிகளின் தரத்தினை உயர்த்திட, இந்த அரசு கடந்த ஓராண்டாக எடுத்து வரும் பல்வேறு சிறப்பு முயற்சிகளின் காரணமாக, சுமார் 7 லட்சம் மாணவர்கள் கடந்த கல்வியாண்டில் மட்டும் மாநிலம் முழுவதுமுள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் பல்வேறு வகுப்புகளில் புதிதாகச் சேர்ந்துள்ளனர். இதன் காரணமாக, அரசுப் பள்ளிகளில் கூடுதலாக கடந்த கல்வியாண்டில் 3,000 வகுப்புகள் தொடங்கப்பட்டன.

அதிகமான எண்ணிக்கையிலான மாணவர் சேர்க்கையினால் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் தேவை அதிகரித்ததையடுத்து. எல்.கே.ஜி. யு.கே.ஜி வகுப்புகளில் பாடம் எடுக்க அனுப்பி வைக்கப்பட்டிருந்த ஆசிரியர்கள், பணி மாறுதல் வாயிலாக 1 முதல் 5 வகுப்புகளுக்கு ஆசிரியர்களாக அண்மையில் சென்றுள்ளனர்.

இருப்பினும், சம்பந்தப்பட்ட அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் தொடர்ந்து அவர்களது கல்வியினை தங்கு தடையின்றி பெற அனைத்து நடவடிக்கைகளும் அரசால் எடுக்கப்பட்டுள்ளன.

எல்.கே.ஜி. யு.கே.ஜி வகுப்புகளை அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து நடத்திட வேண்டும் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் வரப்பெற்ற கோரிக்கையினை ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரைக்கிணங்க, அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி. யு.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கென தகுதியான சிறப்பாசிரியர்கள் தேவையான இடங்களில் நியமிக்கப்படுவர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வெள்ளி 10 ஜுன் 2022