மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 7 ஜுன் 2022

அன்புமணியின் ‘கன்னி ஆர்ப்பாட்டம்’! பாமக அதிரடித் திட்டம்!

அன்புமணியின் ‘கன்னி ஆர்ப்பாட்டம்’! பாமக அதிரடித் திட்டம்!

பாமக தலைவராகப் பொறுப்பேற்ற பின் முதல் ஆர்ப்பாட்டத்தை அதிரடியாக நடத்தத் திட்டமிட்டுள்ளார் அன்புமணி ராமதாஸ்.

பாமக இளைஞர் அணி தலைவராக இருந்துவந்த அன்புமணி, கடந்த மாதம் மே 28ஆம் தேதி நடைபெற்ற சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

பாமகவின் புதிய தலைவரான அன்புமணி, அதிமுக, திமுக, தேமுதிக போன்ற கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றவர், தனது தலைமையில் முதல் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இன்று (ஜூன் 7) அன்புமணி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக தமிழ்நாடு மாற்றப்பட்டு வரும் நிலையில், அதைத் தடுக்க தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை என்பது மிகவும் வேதனையளிக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதில் தமிழக அரசால் செய்யப் படும் ஒவ்வொரு நாள் தாமதமும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.

இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் கடந்த 2021-ஆம் ஆண்டில் ஈட்டிய வருமானம் ரூ. 10,100 கோடி. நடப்பாண்டில் இது ரூ.15,400 கோடியாக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டில் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வருவாய் ரூ.38,500 கோடியாக உயரக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த ஆன்லைன் சூதாட்ட வருமானத்தில் குறைந்தது 20 விழுக்காடு தமிழ்நாட்டிலிருந்து பெறப்படுகிறது. அப்படியானால், நடப்பாண்டில் தமிழ்நாட்டிலிருந்து ரூ.3,080 கோடி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களால் பறிக்கப்படும்; அடுத்த இரு ஆண்டுகளில் இது ரூ.7,700 கோடியாக அதிகரிக்கும். இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டத்தால் மிக அதிக பணத்தை இழக்கும் மாநிலம் தமிழ்நாடாகத் தான் இருக்கும் என்பது புள்ளிவிவரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட உண்மை.

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களால் பறிக்கப்படுவது தமிழ்நாட்டு மக்களின் பணம் மட்டுமல்ல.... லட்சக்கணக்கான குடும்பங்களில் நிம்மதி மற்றும் வாழ்வாதாரமும் தான். ஆன்லைன் சூதாட்டங்கள் இந்தியாவில் 2014-ஆம் ஆண்டில் அறிமுகம் ஆயின. அதற்கு பிறகு 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 60-க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டனர். அதன்பின் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் இயற்றப்பட்டதால் 10 மாதங்கள் தற்கொலைகள் எதுவும் நிகழவில்லை. ஆனால், ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு, கடந்த 10 மாதங்களில் மட்டும் 22 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.

ஆன்லைன் சூதாட்டத்தின் தீமைகள் அனைத்தையும் தமிழக அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்தத் தீமையிலிருந்து தமிழ்நாட்டு மக்களைக் காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு கூறுகிறது. ஆனால், உயர்நீதிமன்றத்தின் அறிவுரைப்படி, திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை இயற்றுவது தான் அதற்கான தீர்வு என்பதை ஏற்றுக்கொள்ள தமிழக அரசு மறுக்கிறது.

தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு தமிழக அரசு சென்றிருப்பதால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. உச்சநீதிமன்றத்தைப் பொறுத்தவரை 1867-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட பொது சூதாட்டச் சட்டத்தின்படி (The Public Gambling Act 1867) ஆன்லைன் சூதாட்டங்களை திறன் சார்ந்த விளையாட்டாகவே பார்க்கிறது. அதனால் தான் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து மராட்டியம், இராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்கள் இயற்றிய சட்டம் செல்லாது என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டிலும் இதே தீர்ப்பு தான் வருவதற்கு வாய்ப்புள்ளது.

அதுமட்டுமின்றி, ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை எதிர்த்து கடந்த நவம்பர் மாதம் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று வரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. ஆன்லைன் சூதாட்டங்கள் திறன் சார்ந்தவை அல்ல; அவை வாய்ப்பு மற்றும் அதிர்ஷ்டம் சார்ந்தவை என்பதை நிரூபிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டால் தான் அதை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ஏற்றுக் கொள்ளும். அத்தகைய சட்டத்தை உருவாக்கி அவசர சட்டமாக பிறப்பிக்க வேண்டும் என்று தான் பாமக வலியுறுத்தி வருகிறது. ஆனால், இது தொடர்பாக தமிழக அரசிடமிருந்து உறுதியான பதில் வராத நிலையில், ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து அவசர சட்டத்தை பிறப்பிக்க வலியுறுத்தி, அறப்போராட்டம் நடத்த பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்திருக்கிறது. சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்திற்கு அருகில் வரும் 10-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு இந்தப் போராட்டம் நடைபெறும். இந்தப் போராட்டத்திற்கு நான் தலைமையேற்கவுள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகள், துணை அமைப்புகள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என்று விரும்புவோரும், பொது நலனில் அக்கறை கொண்டோரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் டாக்டர் அன்புமணி.

பாமக தலைவராகப் பொறுப்பேற்ற 14வது நாளில் நடைபெறும் முதல் ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெறச் செய்யவும், மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கவும், திட்டமிட்டு தமிழகம் முழுவதுமிருந்து மக்களை அழைத்து வரவேண்டும் என்று மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியம் மற்றும் நகரச் செயலாளர்களுக்கு உத்தரவு போட்டுள்ளார் அன்புமணி. மேலும் பாமக தலைமையில் இருந்து, தமிழகத்தின் அனைத்து மாவட்ட பாமக பொறுப்பாளர்களையும் தொடர்புகொண்டு... எவ்வளவு பேர்களை அழைத்து வருகிறார்கள், ஆர்ப்பாட்டத்திற்கு கலந்துகொள்பவர்களின் பெயர், ஊர், ஒன்றியம், வட்டம் மாவட்டம், வாகனங்களின் பதிவு எண் போன்ற விபரங்களைக் கேட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் தடைவிதித்தாலும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்வதற்குப் பல விதமான திட்டங்களையும் வகுத்து வருகிறார்கள். பத்தாம் தேதி நடைபெறும் பாமக ஆர்ப்பாட்டம் சென்னையை ஸ்தம்பிக்க வைக்கும் என்கிறார்கள் பாமக நிர்வாகிகள்.

கடந்த வாரம் இதே இடத்தில்தான் தமிழக பாஜக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத் தக்கது.

-வணங்காமுடி

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

செவ்வாய் 7 ஜுன் 2022