மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 7 ஜுன் 2022

பாஜகவின் வெறுப்புப் பேச்சும் இந்தியாவின் வெளியுறவுச் சங்கடங்களும்!

பாஜகவின் வெறுப்புப் பேச்சும் இந்தியாவின் வெளியுறவுச் சங்கடங்களும்!

பாஜகவின் பல்வேறு பிரமுகர்கள் அவ்வப்போது தங்கள் பேச்சுகளாலும், கருத்துகளாலும் சர்ச்சைக்கு உள்ளாவது கடந்த சில ஆண்டுகளாகவே வாடிக்கை ஆகிவிட்டது. ஆனால், தற்போது இஸ்லாமிய மார்க்கத்தின் இறைத் தூதர் முகமது நபி குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்த கருத்துகள், பாஜக என்பதைத் தாண்டி இந்தியாவுக்கு எதிரான குரல்களை உலக அரங்கில் எழுப்பியுள்ளன.

கடந்த மே மாத இறுதியில் பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா நபிகள் நாயகம் குறித்து தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் அருவெறுக்கத் தக்க வகையில் ஒரு கருத்தை வெளியிட்டார். அதனை நியாயப்படுத்துவது போலவே டெல்லி மாநில பாஜக ஊடகப் பிரிவு தலைவர் நவீன் ஜிண்டால் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார். நுபுர் ஷர்மாவின் நபிகள் குறித்த சர்ச்சையான அந்த கருத்துகள் அடங்கிய வீடியோ சில நாட்களிலேயே சமூக தளங்களில் பரவியது. இது இந்தியாவைத் தாண்டி உலகம் முழுதும் இருக்கும் இஸ்லாமியர்களிடையே அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.

சமூக தளங்களில் பாஜக பிரமுகர்களின் கருத்துக்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உலகத்தில் முக்கியமான இஸ்லாமிய நாடான சவுதி அரேபியா இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஜூன் 5 ஆம் தேதி அதிகாரபூர்வமாக தனது கண்டனத்தை வெளியிட்டது. அதையடுத்து வரிசைகட்டி பல்வேறு இஸ்லாமிய நாடுகளும் இந்தியாவில் இருந்து எழுந்துள்ள நபிகள் பற்றிய கருத்துக்கு தங்கள் கண்டனங்களை வெளியிட்டன.

வளைகுடான நாடான கத்தார் நாட்டில் இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், இந்த விவகாரத்துக்காக ஜூன் 5 ஆம் தேதி கத்தார் அரசின் வெளியுறவு அமைச்சகம் அந்நாட்டுக்கான இந்திய தூதரை அழைத்து தனது கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்தது.

கத்தாருக்கான இந்தியத் தூதர் தீபக் மிட்டல், "இந்தக் கருத்துக்கள் எந்த வகையிலும், இந்திய அரசாங்கத்தின் கருத்துக்களைப் பிரதிபலிக்கவில்லை. இவை சில சமூக விரோத சக்திகளின் கருத்துகள். அவை இந்தியாவின் கருத்துகள் அல்ல. இந்தியா எல்லா மதத்தையும் மதிக்கக் கூடியது. இந்திய அரசியலமைப்பு சாசனம் யாரும் எந்த மதத்தையும் பின்பற்றலாம் என்ற உரிமையை அனைத்து குடிமக்களுக்கும் வழங்கியுள்ளது” என்று கத்தார் அரசிடம் தெரிவித்தார்.ஆனால் கத்தார் அரசோ, "இந்திய அரசாங்கத்திடம் இருந்து இந்த கருத்துகளுக்கு பொது மன்னிப்பு மற்றும் உடனடி கண்டனத்தை எதிர்பார்க்கிறது" என்று தெரிவித்திருந்தது.

கத்தார் மட்டுமல்ல சவுதி அரேபியா, குவைத், ஈரான், பாகிஸ்தான், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவில் நபிகள் நாயகத்தை அவதூறு செய்யும் நடவடிக்கைகளுக்கு தங்கள் எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்தன.

இதற்கிடையே செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, ஊடக பிரிவு தலைவர் நவீன் ஜிண்டால் ஆகியோர் மீது பாஜக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டது. நுபுர் ஷர்மாவை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்த பாஜக தலைமை நவீன் ஜிண்டாலை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கியது. ஜூன் 5 ஆம் தேதியே நுபுர் ஷர்மாவும் இதுகுறித்து விளக்கம் அளித்து மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

நபிகள் நாயகம் தொடர்பாக பாஜகவினர் தெரிவித்த கருத்துக்காக இந்தியாவுக்கு இதுவரை உலக அரங்கில் 15 நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. சவுதி அரேபியா, ஈரான். ஈராக், குவைத், கத்தார்., ஜோர்டான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பஹ்ரைன், மாலத் தீவுகள், லிபியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் அதிகார பூர்வமாக தங்களது எதிர்ப்பை இந்தியாவுக்குத் தெரிவித்துள்ளன.

மேலும் ஆர்கனைசேஷன் ஆஃப் இஸ்லாமிக் கோஆபரேஷன் என்ற உலக இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு இந்த விவகாரத்தை ஐ.நா. சபையை நோக்கி நகர்த்தியுள்ளது. “இந்தியாவில் நபிகள் நாயகம் பற்றிய அவதூறான கருத்துகளை பரப்புவதற்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியாவில் மத சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு ஐ.நா. உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஜூன் 6 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில்,

“இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் இந்தியா பற்றிய குறுகிய பார்வைகொண்ட அனாவசியமான கருத்துகளை முற்று முழுதுமாக மறுக்கிறோம். இந்திய அரசாங்கம் அனைத்து மதங்களையும் மதிக்கிறது. மத ரீதியான சர்ச்சைகளை கிளப்பும் கருத்துகள் சிற்சில தனி மனிதர்களுடையவை. அவர்கள் எந்த வகையிலும் இந்திய அரசாங்கத்தின் கொள்கைகளையோ எண்ணங்களையோ பிரதிபலிக்கவில்லை. அப்படிப்பட்ட சில அவதூறு கருத்துகளைத் தெரிவித்தவர்கள் மீது உரிய வகையில் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு இந்த விவகாரத்தை தவறான முறையில் வழிகாட்டும் வகையில் கருத்துகளை வெளியிடுவது வருந்தத்தக்கது. அந்த அமைப்பின் பிரிவினைவாத அஜெண்டாவையே இது வெளிப்படுத்துகிறது” என்றும் இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிண்டம் பச்சி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி பாஜக அரசை கடுமையாக சாடியிருக்கிறது.,

“இந்தியாவின் 75 வருட சுதந்திர வரலாற்றில் முதன்முறையாக பாஜக தனது வெறுப்புப் பேச்சுகளின் விளைவாக இந்திய தூதரகங்கள் அன்னிய தேசங்களால் கண்டனங்களுக்கு உள்ளாகியிருக்கின்றன. இந்தியாவுக்கு இதைவிட சங்கடமான நிலைமை வேறு எதுவும் இல்லை. பாஜக தனது வெறுப்பாளர்களின் பேச்சுக்காக இந்தியா உலக அரங்கில் தலைகுனிய வேண்டியிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் தொடர்புடைய அந்த இருவரை கைது செய்யுமாறும் காங்கிரஸ் கட்சி கோரியிருக்கிறது.

தமிழ்நாட்டில் திமுகவின் சிறுபான்மையினர் நலவுரிமைப் பிரிவுச் செயலாளர் டாக்டர் த.மஸ்தான், “அண்ணல் நபிகள் பெருமான் குறித்து அவதூறு கருத்தைத் தெரிவித்த பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர்கள் இருவரும் கைது செய்யப்பட வேண்டும்.பொறுப்பற்ற வகையில் செய்யப்படும் இதுபோன்ற வெறுப்பு விமர்சனங்கள் சமூகத்தில் அமைதியை மட்டுமல்ல, எதிர்காலத்துக்கே கேடு விளைவிப்பவை! அவர்கள் இருவர் மீதும் கட்சி ரீதியான நடவடிக்கை மட்டும் எடுத்து பா.ஜ.க. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயலக்கூடாது. சட்டரீதியான நடவடிக்கை அவசியம் என்பதை தி.மு.க. சிறுபான்மையினர் நலவுரிமைப் பிரிவு வலியுறுத்துகிறது” என்று கூறியிருக்கிறார்.

பாஜகவினரின் தொடர் வெறுப்புப் பேச்சுகள் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மீதே எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்குச் சென்றுள்ளது.

வேந்தன்

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

செவ்வாய் 7 ஜுன் 2022