மேகதாது: பாஜக அரசைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் போராட்டம்!

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய, கர்நாடக பாஜக அரசுகளைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் போராட்டத்தை அறிவித்திருக்கிறது. அண்மையில் காங்கிரஸ் கட்சி அகில இந்திய அளவில் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் சிந்தனை அமர்வு நடத்தியதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு மாநில காங்கிரஸ் சார்பிலும் தனித்தனியாக சிந்தனை அமர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த வகையில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சிந்தனை அமர்வு ஜூன் 6,7 தேதிகளில் மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இன்று இரு அமர்வுகள், நாளை இரு அமர்வுகள் என நான்கு அமர்வுகளாக நடைபெறுகிறது.
இந்த நிலையில் முதல் அமர்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, "இந்த சிந்தனை அமர்வு தமிழக காங்கிரசுக்கு புத்துணர்வை ஏற்படுத்தும்" என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர், "மேகதாது அணை விவகாரத்தில் பாஜக அரசு தமிழகத்துக்கு துரோகம் இழைத்திருக்கிறது. இந்த அணை கட்டுவது தொடர்பாக கர்நாடகத்தின் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. காவிரி நதி நீரில் உரிமை பெற்ற தமிழகத்தின், புதுச்சேரியின் ஆலோசனை கேட்கப்படாமலேயே இந்த அனுமதியை கர்நாடகத்துக்கு மத்திய அரசு வழங்கியிருக்கிறது. அது மிகப்பெரிய தவறு.
இதைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெற முடிவெடுத்திருக்கிறொம். இதற்கான தேதி நாளை அறிவிக்கப்படும்" என்று கூறியிருக்கிறார் கே.எஸ், அழகிரி.
-வேந்தன்