மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 5 ஜுன் 2022

சென்னை டு புதுச்சேரி - விசாகப்பட்டினம்: கப்பல் சுற்றுலா தொடக்கம்!

சென்னை டு புதுச்சேரி - விசாகப்பட்டினம்: கப்பல் சுற்றுலா தொடக்கம்!

சென்னை, துறைமுகத்தில் கார்டிலியா குருசஸ் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கடல்வழி எம்பிரஸ் சொகுசு கப்பல் சுற்றுலாப் பயணத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஜூன் 4) தொடங்கி வைத்தார்.

கோவா, மும்பை என வெளிமாநிலங்களில் உள்ளது போல் சென்னையிலும் சொகுசு கப்பல் சுற்றுலா பயணத் திட்டத்தை மேற்கொள்ளத் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. இது தொடர்பான கருத்தரங்கு மும்பையில் நடைபெற்றபோது தனியார் கப்பல் நிறுவனமான கார்டிலியா நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.

கப்பலில் பயணிக்கும் அனுபவத்தையும், ஆழ்கடல் பயண அனுபவத்தையும் தமிழக மக்களுக்கு அளிக்கும் வகையில் இந்தத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னையிலிருந்து தொடங்கி வைத்தார்.

நேற்று மாலை சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கப்பல் பயன்பாட்டைத் தொடங்கி வைப்பதற்காக வந்த முதல்வர் ஸ்டாலின் கப்பலில் ஏறி பார்வையிட்டார். அப்போது கேப்டன் டேனிஸ் குரூப் கப்பலில் உள்ள வசதிகள் மற்றும் அம்சங்கள் குறித்து விளக்கினார்.

இந்த கப்பலில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் போன்ற வசதிகள் உள்ளன. 700 அடி நீளம் கொண்ட இந்த கப்பல் அடுக்கடுக்காக 11 தளங்களைக் கொண்டது. 796 அறைகள் உள்ளன. ஒரே நேரத்தில் சுமார் 1000 பேர் நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கும் வகையிலான அரங்கமும் இருக்கிறது.

உணவகங்கள், உடற்பயிற்சிக்கூடம், சினிமா தியேட்டர், ஸ்பா, மசாஜ் சென்டர், யோகாசனம் செய்யும் இடம், நூலகம் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி, கடல் அழகை கண்டு களிப்பதற்காகக் கப்பலின் ஓரம் தனியே இடம் எனப் பல்வேறு அம்சங்களும் உள்ளன.

மொத்தம் இந்த சுற்றுலா பயணத் திட்டத்தில் 2 நாட்கள், 3 நாட்கள் 5 நாட்கள் என பேக்கேஜ்கள் உள்ளன. சென்னையிலிருந்து புதுச்சேரிக்குச் சென்று திரும்பும் வகையில் இரண்டு நாள் சுற்றுலா திட்டமும், சென்னையிலிருந்து விசாகப்பட்டினத்தில் சென்று அங்கிருந்து புதுச்சேரி வழியாக மீண்டும் சென்னை திரும்பும் வகையில் 5 நாள் திட்டமும் உள்ளன. இந்த கப்பலில் விருந்து கொண்டாட்டங்கள், திருமணங்கள், அலுவல் கூட்டங்கள் நடத்தவும் அனுமதி வழங்கப்பட உள்ளது.

பயண கட்டணமாக 2 நபருக்கு 40,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார் கப்பல் நிறுவனமே இந்தக் கட்டணத்தை நிர்ணயிக்கிறது. வரும் செப்டம்பர் 23ஆம் தேதி வரை இந்த கப்பல் சென்னையில் சுற்றுலா பயணத்தை வழங்குகிறது. இலங்கையில் சூழல் சரியானதும் கொழும்பு வரை இயக்கவும் வாய்ப்பு இருப்பதாகக் கப்பல் நிறுவன அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

-பிரியா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

ஞாயிறு 5 ஜுன் 2022