மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 மே 2022

காங்கிரஸ் , பாஜக வேட்பாளர்கள்? தமிழகத்திலிருந்து யார்?

காங்கிரஸ் , பாஜக வேட்பாளர்கள்? தமிழகத்திலிருந்து யார்?

மாநிலங்களவை தேர்தலில் தமிழ்நாடு சார்பில் ப.சிதம்பரம் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் தலைமை நேற்று இரவு அறிவித்தது.

நாடு முழுவதும் தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வரும் ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதில் தமிழகத்திலிருந்து 6 எம்பிக்களின் பதவிக் காலம் நிறைவடைய உள்ள நிலையில் அந்த இடங்களுக்கு திமுக சார்பில் நான்கு பேரும், அதிமுக சார்பில் இரண்டு பேரும் தேர்ந்தெடுக்கப்படலாம்.

இதில் திமுக ஒரு சீட்டை காங்கிரசுக்குக் கொடுத்தது. அதன்படி தமிழகத்திலிருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவது யாரென்று கேள்வி எழுந்தது. காங்கிரஸ் கட்சியில் எம்.பி பதவிக்கு கடும் போட்டி நிலவியது.

சமீபத்தில் இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கட்சித் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசினார். எம்.பி. பதவிக்காக அவர் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து ப .சிதம்பரம் மாநிலங்களவைத் தேர்தலுக்குப் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் தலைமை நேற்று இரவு அறிவித்துள்ளது.

சத்தீஸ்கரிலிருந்து ராஜீவ் சுக்லா மற்றும் ரஞ்சித் ரஞ்சன், ஹரியானாவிலிருந்து அஜய் மாக்கேன், கர்நாடகாவில் இருந்து ஜெயராம் ரமேஷ், மத்தியப் பிரதேசத்திலிருந்து விவேக் தங்கா, மகாராஷ்டிராவிலிருந்து இம்ரான் பிரதாப்கர்ஹி, ராஜஸ்தானிலிருந்து ரந்தீப் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக், பிரமோத் திவாரி, ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ப.சிதம்பரம் இன்று (மே 30) காலை தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று பகல் 12 மணியளவில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மாநிலங்களவைத் தேர்தலில் என் வேட்பு மனுவை அளிக்கிறேன் என்று மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்கு ஆதரவு தருகின்ற தி மு கழகம், அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தோழமைக் கட்சியினருக்கு என் இதயம் நிறைந்த நன்றி” என பதிவிட்டுள்ளார்.

அதுபோன்று பாஜகவிலிருந்து நாடு முழுவதும் 16 பேர் போட்டியிடுகின்றனர். இதில் கர்நாடகாவில் இருந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ஜக்கேஷ் ஆகியோர் போட்டியிடுவதாகக் கட்சித்தலைமை நேற்று அறிவித்துள்ளது.

மகாராஷ்டிராவிலிருந்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் அணில் சுக்தேவ்ரோ பொந்தே உள்ளிட்டோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானாவிலிருந்து ஒருவரும், பீகாரிலிருந்து இரண்டு பேரும், உத்தரகாண்டில் இருந்து ஒருவரும், உத்தரப் பிரதேசத்திலிருந்து ஆறு பேரும், ராஜஸ்தானிலிருந்து ஒருவரும் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர்.

பிரியா

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

திங்கள் 30 மே 2022