மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 மே 2022

அமைச்சர்களின் ஆலோசனை : 6 மாநகராட்சி ஆணையர்கள் அதிரடி மாற்றம்!

அமைச்சர்களின் ஆலோசனை : 6 மாநகராட்சி ஆணையர்கள் அதிரடி மாற்றம்!

மாநகராட்சி ஆணையராக உள்ள ஆறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இன்று ஒரே நாளில் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சட்டமன்றக் கூட்டம் முடிவடைந்ததும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தலைமைச்செயலாளர் இறையன்பு இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

மு.க. ஸ்டாலின் தலைமையிலான புதிய தி.மு.க. அரசாங்கம் பதவிக்கு வந்ததிலிருந்தே இதுவரை இல்லாத புதுவிதமான ஆட்சியதிகார பாணி கொண்டுவரப்பட்டது. அதன் ஒரு அம்சமாக, பதவி உயர்வின் மூலம் இந்திய ஆட்சிப் பணி - ஐ.ஏ.எஸ். அந்தஸ்து பெற்ற அதிகாரிகள் பணியாற்றிய இடங்களில், நேரடி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிப்பது இருந்துவருகிறது.

அரசின் பல்வேறு துறைகளின் செயலாளராகப் பணியாற்றி திமுக, அதிமுக இரண்டு ஆட்சிகளிலும் நல்ல பெயர் வாங்கிய ககன் தீப் சிங் பேடி, அவரைவிட அனுபவம் குறைந்த அதிகாரிகள் வகித்த மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். அதிகாரிகள் மத்தியிலேயே இது தவறாகிவிடும் எனப் பேசப்பட்டபோது, அவரே ஒப்புக்கொண்டதால் அப்போதைக்கு எழுந்த அதிருப்தி பின்னர் காணாமல் போனது.

புயல், வெள்ளம் போன்ற பேரிடர்க் காலங்களில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய அவரால், கொரோனா காலத்து சென்னையின் நெருக்கடியைச் சமாளிக்க முடியும் என முடிவெடுக்கப்பட்டது. அவருடைய பணி பரவலாக பல தரப்பினராலும் வரவேற்கப்படுவதாகவும் உள்ளது.

தலைநகர் சென்னை மட்டுமின்றி, மதுரை, கோவை, திருச்சி போன்ற மாநகராட்சிகளுக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே ஆணையர்களாக நியமிக்கப்பட்டனர்.

இவர்களில் சிலர் மீது மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், அமைச்சர்களும்கூட அதிருப்தி அடையும்படி சம்பவங்கள் நடைபெற்றன. குறிப்பாக, மதுரை ஆணையர் மீது இரண்டு அமைச்சர்கள் தரப்பும் அவ்வளவு அணுக்கமாக இல்லாதபடிதான் இன்றுவரை நிலவரம் இருந்துவருகிறது. கோவை மாநகராட்சி ஆணையர் மீதும் மாவட்ட தி.மு.க. தரப்பிலிருந்து மேலிடத்திடம் அதிருப்தி தெரிவிக்கப்பட்டு வந்தது. சட்டமன்றக் கூட்டத்தொடருக்கு முன்பிருந்தே சில அதிகாரிகளை மாற்றவேண்டும் என்று கோரிக்கைகளும் வைக்கப்பட்டன.

தேர்தல் பரபரப்பு தொடங்கவுள்ள நிலையில் மூத்த அமைச்சர்களிடம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் இடமாற்றம் குறித்து கருத்து கேட்கப்பட்டது. சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்ததும் இடமாற்றல் அறிவிக்கப்படும் என்றும் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று பிற்பகல் வெளியிடப்பட்ட அரசாணையில், ஆறு மாநகராட்சி ஆணையர்கள் இடமாற்றமும் இடம்பெற்றுள்ளது.

மதுரை மாநகராட்சி ஆணையர் கே.பி.கார்த்திகேயன் பணியிடம் மாற்றப்பட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சென்னை மாநகராட்சி தென்மண்டல துணை ஆணையர் சிம்ரஞ்சீத் சிங் காலோன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை ஆணையர் ராஜ கோபால் சுங்கரா பணிமாற்றப்பட்டு, சென்னைக் குடிநீர் வாரியத்தின் செயல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியர் எம். பிரதாப் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி மாநகராட்சி ஆணையராக, தருமபுரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் மரு. ஆர். வைத்திநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் பி. விஷ்ணு சந்திரன் பணியிடம் மாற்றப்பட்டு, நகராட்சி நிர்வாகத் துறையின் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை நிர்வாக இயக்குநர் சிவகிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

நாகர்கோவில் ஆணையர் ஆஷா அஜித் தொழில்துறை வழிகாட்டி- ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பின் செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக வணிகவரித் துறை - மாநில வரிகள் பிரிவு இணை ஆணையர் ஆனந்த் மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆவடி மாநகராட்சியின் ஆணையராக அரசு விருந்தினர் இல்லத்தின் மரபு ஒழுங்குப் பிரிவு இணை அதிகாரியாக இருந்த தற்பகராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

ஞாயிறு 29 மே 2022